Tuesday, 31 January 2023

கருமணியைக் கேசவனை…..

   

                                   கருமணியைக் கேசவனை…..


                                           பல்லவி                        

                        கருமணியைக் கேசவனைத் திருவரங்கநாதனை

                        நெருங்கி நின்று நான் காணும் நந்நாளென்னாளோ

                                        அனுபல்லவி

                        அருகிருக்கும் திருமகள் பெரிய பிராட்டியவள்

                        கருணையுடனுடனிருந்து திருவடி பணிந்திருக்கும்

                                            சரணம்

                        பெருமைமிகு காவிரி தன் கரங்களால் வருடிடும்

                        திருவரங்கம் தனிலே ஆயிரம் நாவுடைய

                        அரவரசனனந்தன் மேல் கிடந்துறங்குமழகு

                        கருநீலக்கல் போன்ற பெரிய பெருமாளை            


”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி

இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த -

அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்

அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி -

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி

திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் -

கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்

கண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே?”

(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?) என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம். இந்த தாபமிருந்தால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.

ராஜா குலசேகரருக்கு அரங்கனோடும் அவன்தம் அடியாரோடும் என்று பித்தாகி பிணைந்து நிற்போம் என்று மிக ஆசை. வைணவ குழாமோடு கூத்தாட ஆசை. அரச பொறுப்பு குறுக்கே நின்றது. அமைச்சர்களின் ஒரு சூழ்ச்சி, குலசேகர மன்னனின் அரசப் பற்றை அறுத்தது. அரங்கன் பற்று மிகுந்தது. இதில் அமைச்சரின் சூழ்ச்சியெல்லாம் அரங்கனின் சித்தமே. இவர் அரங்கனுக்காக ஏங்கினார். .அவன் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி அவராக எல்லாம் துறக்கும்படியாக செய்து அவனருகே இழுத்துக்கொண்டார். இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அரங்கனுக்கு நிகர் அரங்கனே..! ஆழ்வாராதிகள் தொடங்கி பூர்வாச்சாரியர்கள் ஏன் இன்று வரை யாரை எப்படியெப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி செய்வான் இந்த மாயவன்! யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்தி க்கொள்ளும்படியும் செய்வான்!. அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறுப்பெற்றார்.

No comments:

Post a Comment