Wednesday, 11 January 2023

மறைமூர்த்தி……

 நாங்கள் ஆயர் குலத்தவர்கள். மாடுகளை மேயவிட்டபடி ஆங்காங்கே உட்கார்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். எங்களுக்குப் படிப்பறிவெல்லாம் கிடையாது. ஆனாலும், முழுமைப்பொருளான கோவிந்தா, நீயே எங்கள் மத்தியில் மாடு மேய்ப்பவனாகப் பிறக்கும் அளவு நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம். நாங்கள் அறிவு இல்லாதவர்கள், அப்பாவிச் சிறுவர்கள். உன்னை முறைப்படி எவ்வாறு வழிபடுவது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் பரிசுத்தமான அன்பினால் நாங்கள் உன்னை எந்தப் பெயரிட்டு எந்த விதத்தில் அழைத்தாலும், அதில் உள்ள அன்பை மட்டும் ஏற்றுக்கொள், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாதே. உனக்கும் எங்களுக்கும் உள்ள இந்த உறவு எங்களது எல்லாப் பிறவிகளிலும் தொடர வேண்டும். இந்த வரத்தை எங்களுக்கு அருள்வாயாக.


                                 மறைமூர்த்தி……


                                     பல்லவி

                மறைமூர்த்தி மாதவனே கேசவனே எங்கள்

                கறை பிறவிப் பிணி தீர்க்கும் கருணாமூர்த்தியே

                                   அனுபல்லவி

                 பிறவி பல எடுத்தாலும் நம்முடைய இந்த

                 உறவு தொடரவே விரும்பி உனைத் துதித்தோம்

                                           சரணம்

                 கறவைகள் மேய்க்கும் அறியாத இடைக்குலம் நாம்

                 குறையொன்றுமில்லா கோவிந்தா உனதருளால்

                 சிறுபேர் வைத்தழைத்தோமெனக் கருதி எள்ளாமல்

                 இறையே உன் பறை தந்து அருளேலோரெம்பாவாய்


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

No comments:

Post a Comment