Sunday, 29 January 2023

பவனி வரும்……..

                

                                    பவனி வரும்……..                   


                                      பல்லவி

                   பவனி வரும் ரங்கராஜனைக் காண

                   அவனியோர்க்கு கண் ஆயிரம் போதாது

                                   அனுபல்லவி

                   புவனம் போற்றும் கேசவனை மாதவனை
                   கவனமுடனடியாரனைவருமுடனிருந்து

                                       சரணம்

                   கும்பம் சுமந்து பட்டர்கள் முன் வர

                   குடைகளிரண்டு அழகுடன் பின் தொடர

                   அம்பாரியுடனே ஆனைகளிரண்டு

                   ஆண்டாள் லக்ஷ்மி மணியோசையுடன் வர


                   அதன் பின்னே குதிரைகளிரண்டும்  நடந்து வர

                   மேள தாளங்கள் இசையுடன் முழங்கிட

                   அடியார்களனைவரும் ரங்கா ரங்காவென

                   குரலெழுப்பி பக்தியுடன் அருகே தொடர்து வர


                   தங்க கருடனிரு திருவடி தாங்கி வர

                   அங்கம் பரிமளிக்க தங்கப் பட்டாடையுடன்          

                   வெண்பட்டில் மஞ்சள் பச்சை சிவப்புடனே

                   கண்ணைப் பறிக்கும் வண்ணத் தோற்றமுடன்


                   மண்ணையுண்ட வாயன் திருவரங்கநாதன்

                   கேடயமுடைவாளேந்தி  அபயகரம் காட்டி

                   திருமார்பில் நீலமணி ரத்தினக்கல் திகழ

                   மலர் மாலை மணி மாலை காசுமாலையணிந்து


                   நெற்றியில் அழகு கஸ்தூரித் திலகமுடன்

                   முத்துமணி பதித்த பொற்கிரீடமணிந்து     

                   அபய கரம் காட்டி அனைவருக்குமருள் தர

                   தங்க க்குடை சுழல அதன் கீழே நடந்து        

       

#இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? ராஜகோபுரத்தை  பார்த்தபடி அனைவரின் கண்களும் காத்திருந்தன. ,முதலில் பட்டர் சுவாமிகள் கும்பாவும் தீர்த்தமும் எடுத்துசென்றார் .  பின்னால்  இரண்டு குடை வந்தது.சிறிது நேரம் கழித்து மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்பது போல கிளிங் கிளிங் என்று மணியோசையோடு ஆண்டாள் ( யானை) அசைந்து வர அவளை தொடர்ந்து லஷ்மி (யானை) ஆடி வர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  ஹைய்யா நம்ம ஆண்டாள் என்று மனசு துள்ளி குதித்தது .பின்னாலே இரண்டு குதிரையும்  டகுசிகு டகுசிகு என ஸ்டைலா நடந்து வந்தது. மேளதாளம் இசை முழங்க , பேசுவதை நிறுத்தி எல்லாருடைய கைகளும் கைபேசியை உயர்த்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது . பக்தர்கள் ரெங்கா ரெங்கராஜா  ரங்கபிரபோ  என வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது . மக்கள் வெள்ளத்தின் நடுவே தீப்பந்த ஒளியில்  தங்க கருடன் இரு திருவடிகளையும் தாங்க ரெங்கராஜன் ஜம்மென்று பவனி வந்தார். அதுவும் தங்க கருடன் மேல் .  கருடன் கம்பீரமாக இரு கைகளால் ரெங்கனின் திருவடி ஏந்தி பூக்களால் அலங்கரித்து மாலையும் சார்த்திக்கொண்டு கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து ( பரம்பொருள் ராஜாதிராஜன் ரெங்கராஜன் உலகமுண்ட  பெருவாயனை சுரக்கிறது அல்லவா அதன் பாரம் தாங்காமல் ) ரேஸ் கலர் வஸ்திரம் அணிந்து இருந்தார். இடது காலை மண்டியிட்டு வலது பாதம் தெரிய சிறகுகளை விரித்து  கண்களில் ஒரு ஜொலிப்போடு மிடுக்கான நடையில் வந்தார். கருட பகவானே இத்தனை அழகு என்றால் ரெங்கராஜன் பற்றி சொல்லவும் வேண்டுமோ?!!! அடுக்கு பாவாடை வஸ்திரம் அதுவும் வெண்பட்டு பச்சை பார்டர், மஞ்சள் பட்டில் சிவப்பு பார்டர் என்று கலர்கலராக உடுத்தி இருந்தார். ராஜா இல்லையா? இடது கை பக்கம்  சைடில் கேடயம் ,வாள் செருகி வைத்திருந்தார். வலது கரம் அபயஹஸ்தம் காட்டி நான் இருக்கேன் என்பது போல இருந்தது. எப்பவும் போல மார்பில் நீலமணிக்கல் , கலையாத கஸ்தூரி திலகம் , ஒரே ஒரு செண்டு மாலை ஒரு வெள்ளை மாலையோடு. காசுமாலையும் கூடவே. அப்புறம் முத்து மணி பதித்த கிரீடம்.   தங்க குடை சுழல, சட்டென நம்மை கடந்து போக , பின்னழகு காண ஆஹா  ஆஹா செண்பக பூவால் ஒரு கொண்டை  ,  ராஜாவுக்கே உரிய  கோலம் ஒரு  மிடுக்கான ஒய்யாரமாக நடை கருடனின் பெருத்த பின்பக்கம் ஏதோ வினதபுத்திரன் தரை இறங்கி வந்தது போல் இருந்தது . இப்படி ரசித்து ரசித்து மனசுக்குள் மத்தாப்பை  பரவசமடைவதற்குள் ரெங்கா ரெங்கா கோபுரம் நோக்கி பெருமாள் செல்ல , இன்னும் சேவிக்கமாட்டோமா என்ற ஏக்கத்தில் வீடு வந்து சேர்ந்தேன் .  ஏக்கம் ஒருபுறம் இருந்தாலும் , நீங்களே சொல்லுங்கோ இன்றைக்கு ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே அல்லவா? என்றும்  அன்பிற்கினிய  உமா என்கிற சரண்யா, ஸ்ரீரங்கம்  ( இன்று தை கருட சேவை, ஸ்ரீரங்கம்) 29.1.23

No comments:

Post a Comment