மாவீரன்......
பல்லவி
மாவீரன் நீயென்று மூவுலகும் அறியும்
தேவி ஜானகியின் கரம் பிடித்த ஶ்ரீ ராமா
அனுபல்லவி
பூவினை விடவும் அழகு முகமுடையவனே
ஓவியம் போல் திகழும் எழில் வடிவுடையவனே
சரணம்
மூவடி மண் கேட்டு மாவலியை வென்றவன் நீ
ஆவினங்கள் மேய்த்த கேசவனும் நீயே
கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவனே
தேவகியின் மைந்தனாய் அவதரித்தவனே
கூவியழைத்த கரிக்கபயமளித்தவனே
தேவரும் முனிவரும் யாவரும் வணங்கிடும்
தேவாதி தேவனே கோசலை மைந்தனே
மாவீரன் ராவணனை போரிட்டு மாய்த்தவனே
மூவாசைப் பிணி போக்கி முன்வினைப்பயன் நீக்கி
சேவடி பணிவோர்க்கு நலமனைத்துமளிப்பவனே
மாவிடை வாகனனும் பரிந்துரைத்த உன் நாமம்
நாவினாலுரைப்பவர்க்கு நல்லருள் தருபவனே
No comments:
Post a Comment