சிம்மாசனேச்வரியை......
பல்லவி
சிம்மாசனேச்வரியை ஶ்ரீ லலிதாம்பிகையை
சிம்ம வாகனத்தில் அமர்ந்தவளைத் துதித்தேன்
அனுபல்லவி
இம்மாநிலம் போற்றும் திரிபுரசுந்தரியை
அம்புயநாபன் கேசவன் சோதரியை
சரணம்
உம்பர் முனிவர்களும் தேவேந்திரனும்
தும்புரு நாரதரும் அரம்பையரும் காமனும்
அம்புய மலரமர் கமலாலயனும்
சம்புவும் திருமாலும் கரம் பணிந்தேத்தும்..... ( சிம்மாச..... )
சும்ப நிசும்பரை போரிட்டு மாய்த்தவளை
கம்பனும் கவி காளிதாசனும் புலவர்களும்
தம் கவியில் பாடி போற்றிய ஈச்வரியை
அலைமகளும் கலைமகளும் நேசிக்கும் மலைமகளை .. (சிம்மா..)
அம்புலி பிறையணிந்த அகிலாண்டேச்வரியை
கும்பமுனிக்கருள் தந்த பரமேச்வரியை
நம்புமடியார்க்கு இன்பமளிப்பவளை
ஜம்புகேச்வரரின் அன்பு நாயகியை
No comments:
Post a Comment