கதம்ப வனத்தில் கோவில் கொண்டவளே
காருண்ய பார்வை நோக்கி எனக்கு அருள்பவளே
கிளியை கையில் ஏந்தி அற்புத காட்சி தருபவளே
கீர்த்தியை உனது போற்றி பாடல்கள் எழுத அருள்பவளே
குறிஞ்சி மலர் போல் நீல வண்ண பூக்களால் பூஜிக்கிறேன்
கூந்தல் அலங்காரத்தில் மாம்பழ கொண்டையில் அற்புத தரிசனம் தந்தாய்
கெட்டியாக உன் தாமரை பாதங்களை பிடித்துகொண்டேன்
கேட்டிடுவாய் என் வேண்டுகோளை
கருணை கடல் போன்றவளே
கைகளால் மணமிக்க பூக்களை அள்ளி பொழிந்து உனக்கு புஷ்பாஞ்சலி செய்திடுவேன்
கோரியதை உடனுக்குடன் நிறைவேற்றி மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பவளே
கௌரி காமாக்ஷி விசாலாக்ஷி குங்குமநாயகி மீனாக்ஷி என பல பெயர்களால் ஆசையோடு அழைத்திடும் எனக்கு உன் பொற்பாதங்களில் அடைக்கலம் தந்திடுவாய் மாதே திரிபுரசுந்தரி
எனையோர் வேடமிட்டு இவ்வுலக அரங்கிலாட விட்டாய்
என்னால் இனியாட முடியாது
திருவுளமிரங்கி ஆடினது
போதுமென்று ஓய்வளிக்க உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷி யென பல பெயருடன் எங்கும் நிறைந்தவள்
என் மனக் கோயிலிலும் எழுந்தருளிய
தாயே...
என் மனக்கோயிலில்…..
பல்லவி
என் மனக்கோயிலில் எழுந்தருள்வாயே
உன்னையே துதித்தேன் கேசவன் சோதரி
அனுபல்லவி
அன்னையே நீயே மீனாக்ஷி காமாக்ஷி
நீலாயதாக்ஷியென பல பெயருடையாய்
சரணம்
கதம்ப வனந்தனில் கோயில் கொண்டவளே
கருணை விழியிரண்டால் எனைக்காப்பவளே
கிளிதனை ஏந்திய அழகுக்கை உடையவளே
உனைப் போற்றி பாடிட எனக்கருள் தருபவளே
மலர் பல தூவியுன் மலர்ப் பதம் பணிந்தேன்
அலங்கரித்த கூந்தலுடன் அற்புதக் காட்சி தந்தாய்
விலங்கு பூட்டியேயுன் கழலடி உளம் வைத்தேன்
நலம் தர வேண்டினேன் என் குறை கேளாய்
உலகில் பலவிதமாய் திரிந்திடுமெனையே
பிறப்பிறப்பறுத்து ஆண்டருள வேண்டுமென
அலகிலா விளையாடல் புரிந்திடுமுனையே
தலம் வந்து பணிந்தேன் திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment