Saturday, 26 June 2021

புவி போற்றும்…

 40. குறை தீர

கவிஞன் புகலும் கவின்ஆர் தமிழ்உன்
செவிஏ றியூம்நீ திருகல் சரியோ?
புவிதான் புகழும் புழைக்கைய! கரம்
குவிவேன்: மகிழ்வேன்: குறைதீர்த்தருளே!

பொழிப்புரை:- கவிஞர்களால் புகழ்ந்து பேசப்படும் அழகிய தமிழ்ப் பாக்கள் உன் செவிகளில் விழுந்தும் நீ அருளாமல் இருப்பது சரியாகுமோ? உலகத்தார் புகழும் தும்பிக்கையை உடையவனே! என் இரண்டு கைகளையும் குவித்தேன்: அதனால் மகிழ்ந்தேன்: என் குறைகளைத் தீர்த்தருளுவாயாக!.

                                           புவி போற்றும்……

                                                 பல்லவி

                             புவி போற்றும் அழகிய துதிக்கையுடையவனே

                             அவியுண்ணுமரர்கள் துதிக்கின்ற கரிமுகனே

                                                 அனுபல்லவி

                             தவம் செய்யும் முனிவர்களும் அடியாரும் பணிந்திடும்

                             நவசக்தி கணபதியே கேசவன் மருகனே

                                                       சரணம்

                             கவிஞன் நானுனைப் புகழ்ந்து பைந்தமிழால் பாடும்

                             கவியுந்தன் பெருத்த செவிகளில் விழுந்தும் நீ

                             செவி சாய்த்தென் குறைகளை கேளாதிருப்பதேன்

                             குவித்த கரங்களுடன் தாள் பணிந்தேனருள்வாயே


                                                 

 

No comments:

Post a Comment