Wednesday, 16 June 2021

மதியணிந்த…..

அம்பாளுடைய ஸ்ரீபாதம் சிவந்த நிறத்துடன் இருக்கும். அடியவர்களுக்கு என்றும் அருள் மழை பொழிகின்ற அற்புதமான திருவடி.

"சங்கரியே ! உன் சுய பாதகமலங்களில் இந்த சிவப்பு வர்ணமானது பிரகாசிப்பது எப்படி ? சிலர் சொல்வர் உன்னுடைய பெருத்த பின் பாகங்களின் கணத்தை தாங்கும் சிரமத்தினால் வந்தன என்று. வேறு சிலரோ மகிஷாசுரன் உடைய சிரசின் மீது உன் ஸ்ரீ பாதத்தை வைத்து அதனை பொடிப் பொடியாக்கி அப்போது அவனுடைய ரத்தம் உன் பாதங்களில் படித்ததினால் அவை சிவந்தன என்று சொல்லுவர். ஆனால் நானோ, உன் ஸ்ரீ பாதங்களில் பக்தியுடன் நமஸ்காரிக்கின்றவர்களின் மீது ஏற்பட்ட பரி பூர்வமான அன்பினுடைய வெள்ளப்பெருக்கு தான் இந்த சிவப்பு வர்ணம் என்று நினைக்கிறேன்" என்று பாடுகிறார் பட்டதரி.

மேலும்,மூக பஞ்சசதி பாதாரவிந்த சதகத்தில் 76வது ஸ்லோகம்

கதம் வாசாலோபி பிரகட மணி மஞ்ஜீர நினதை:

ஸதைவ ஆனந்தார்த்ரான் விரசயதி வாசம்யம ஜனான் |

ப்ரக்ருத்யா தே ஷோணச்சவிரபி ச காமாக்ஷி சரண:

மனீஷா நைர்மல்யம் கதமிவ நருணாம் மாம்ஸலயதே ||

 “வாசால:” என்றால் வாயாடின்னு அர்த்தம். பேசிக்கொண்டே  இருக்கறவர்கள் போல  இந்த பாதாரவிந்தத்துல கட்டியிருக்கற சலங்கை  மணி சத்தம் பண்ணுகிறது. அந்த மணிய வெச்சுண்டு ஓயாது  பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனால் வாயாடியா இருக்கற அந்த பாதாரவிந்தம் எப்பவும் “வாசம்யமஜனான்” வாக்கை அடக்கிய முனிவர்களுக்கு, அந்த அம்பாளோட சரண தியானம் பேரானந்தத்தை கொடுக்கிறது. மஹாபெரியவா கூட மூக பஞ்சசதி “சிவ சிவ பஷ்யந்தி” என்ற ஸ்லோகத்தைப் பற்றி பேசும் போது, “அம்பாளோட சரண த்யானம் தான் பண்ணவேண்டிய கார்யம், அதை பண்ணிணா நாம நிறைஞ்சு இருக்கலாம்” என்று சொல்வார். அந்த மாதிரி மகான்களுக்கு அம்பாளுடைய பாத ஸ்மரணத்னால பேரானந்தம் கிடைக்கறது, அதை இப்படி வேடிக்கையாக கவி சொல்கிறார். உன்னோட பாதாரவிந்தத்துல இருக்கற சலங்கை ஓயாத சத்தம் பண்றது. ஆனா வாக்கை அடக்கி மௌனமா முனிவர்களா இருக்கிறவர்களுக்கு இந்த பாதஸ்மரணம் ஆனந்தத்தை கொடுக்கிறது. பொதுவா பேசாம இருக்கிறவாளுக்கு யாராவது சத்தம் போட்டுண்டே இருந்தா பிடிக்காது இல்லையா? அதற்கு மாறுதலா விரோதாபாசமா இருக்குனு விளையாட்டா சொல்றார்.

ஸ்லோகத்தோட இரண்டாவாவது அடியிலையும் அதே அலங்காரத்தை உபயோகப் படுத்தறார். பாதாரவிந்தம் செக்கச்செவேல்னு இருக்கு, ஆனா நமஸ்காரம் பண்ற மனுஷாளோட மனசுல வெண்மையை உண்டாக்குகிறது. அதாவது மனசுல  தூய்மையை  உண்டாக்குகிறது. அது ரஜஸா (சிவப்பா) இருந்தாலும் தன் பக்தர்கள் மனத்தில் ஸத்வத்தை (வெண்மையை) வளர்க்கிறது அப்படீங்கறது இந்த அழகான ஸ்லோகம்.

 

                                                                      மதியணிந்த…..


                                                                      பல்லவி

                                                    மதியணிந்த சங்கரியே ஶ்ரீலலிதாம்பிகையே

                                                    கதி நீயே தாயே  எனக்கருள்வாயே

                                                                     அனுபல்லவி

                                                    அதிசயமான சிவந்த உன் பதங்களை

                                                    துதித்தேன் அன்னையே கேசவன் சோதரி

                                                                        சரணம்

                                                    பதங்களில் சூடிய சலங்கை மணிகளுன்

                                                    பதி நாமம் சொல்வதை ரசித்திடும் முனிவர்கள்

                                                    அதிசயமானந்தமடைந்து மகிழ்ந்தனர்

                                                    அதனாலுன் பதம் சிவந்ததோ வியந்தேன்


                                                    விதி முடித்து மகிடன் தலை சிதைத்ததாலவன்

                                                    உதிரம் பட்டு உன் பாதம் சிவந்ததோ

                                                    பதம் சிவந்திருந்தாலும் பணிந்திடுமடியார்கள்

                                                    மனம் வெளுக்கச் செய்து அருளளிப்பவளே

                                                    

                                                    

    

       

                    

No comments:

Post a Comment