Monday, 15 September 2014

பிள்ளையார் பெருமை

                                   பிள்ளையார் பெருமை 


                                              பல்லவி

                              அருள் தரும் ஆனை முகத்தோனை கணபதியை

                               எளிய கடவுளை  மனமாரத்துதித்தேன்
 
                                                அனுபல்லவி

                                திருவிளையாடல்கள் பல புரிந்தவனை

                                திருவின் நாயகன் கேசவன் நேசனை

                                                 சரணம்

                              அருகம் பில்லொன்றுக்கு  ஈடாகப் பொன்கேட்டு

                              அமரேந்திரனின் கர்வம் தனைத் தீர்த்த

                              அருந்தவ முனிவர் கௌண்டின்யர்  பூஜித்த

                              பெருமைக்குரிய பிள்ளையாரைக் கரிமுகனை







SRI MAHAGANAPATHI GANAPATHI AGRAHARAM
அருகம்புல்லுக்கு ஈடாக பொண்ணா?

ஏளனம் செய்த இந்திரன் கடைசியில் மண்டியிட்ட கதை !
ரிஷிகளில் கௌண்டின்ய மகரிஷி விநாயகப் பெருமானின்... தீவிர உபாசகர். தினசரி விநாயகருக்கு பூஜை செய்யாமல் தனது நாளை தொடங்க மாட்டார். கௌண்டின்யரின் பத்தினியின் பெயர் ஆசிரியை.
மற்ற ரிஷிகள் எல்லாம் அரசர்களையும் சக்கரவர்த்திகளையும் நாடிச் சென்று பொருளீட்டி வர, தன் கணவர் இப்படி விநாயகருக்கு அருகினால் அர்ச்சனை செய்வதே போதும் என்று கருதுகிறாரே என்று வாட்டம் ஏற்பட்டது ஆசிரியைக்கு. போதாக்குறைக்கு அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் எல்லாம் தங்கள் கணவன்மார்கள் அரசர்களை நாடிச் சென்று பெற்று வந்த பொருட்களை இவளிடம் காட்டி இவளது இயலாமை குறித்து பரிகசித்து வந்தனர்.
இதனால் மிகவும் மனவாட்டத்துடன் இருந்தாள் ஆசிரியை. மனைவியின் மனவாட்டத்தை கண்ட கௌண்டின்யர் யாதென வினவ, ஆசிரியை “ஒன்றும் இல்லை!” என்று கூறி மழுப்பிவிடுகிறாள்.
பெண்கள் ஒன்றுமில்லை என்றால் அதில் ஓராயிரம் விஷயம் இருப்பது ரிஷிகளுக்கு தெரியாதா என்ன? கௌண்டின்யர் தனது பத்தினியின் மன வாட்டத்தின் காரணத்தை புரிந்துகொள்கிறார்.
உள்ளே சென்று விநாயகருக்கு தாம் அர்ச்சித்த ஒரு அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு அவளை அழைத்து, “தேவி, எனக்கொரு உதவி செய்யவேண்டும். செய்வாயா?” கேட்க….. “சொல்லுங்கள் சுவாமி” என்கிறாள்.
“இந்த அருகை கொண்டு சென்று தேவேந்திரனிடம் தந்து இதற்கு ஈடான பொன்னை பெற்று வா” என்கிறார்.
கணவரின் கட்டளையை நிறைவேற்ற திருவுளம் கொள்ளும் ஆசிரியை, கொடுப்பது தான் கொடுக்கிறார்…. ஒரு அருகம்புல் கட்டை கொடுத்தாலாவாது அதன் எடைக்கு ஒரு பொன் கிடைக்கும்…. இந்த ஒரு அருகிற்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என்று பலவாறாக எண்ணி இந்திரலோகம் சென்றாள்.
அழகாபுரி பட்டணத்தில் அஷ்டதிக் பாலகர்களும் சபையில் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் தனது சிம்மாசனத்தில் மனைவி இந்திராணியுடன் வீற்றிருக்கிறான் தேவேந்திரன்.
தேவலோகத்தின் காவலர்கள் ஓடிவந்து ரிஷி பத்தினி ஒருவர் வந்திருப்பதாக கூற, அவரை உள்ள அழைக்கிறான் தேவேந்திரன்.
தேவேந்திரனை வணங்கும் ஆசிரியை, “தேவேந்திரா… கௌண்டின்ய மகரிஷியின் தர்மபத்தினி நான். இந்த அருகை உன்னிடம் தந்து இதற்கு ஈடான பொருளை பெற்று வருமாறு என் கணவர் கட்டளையிட்டிருக்கிறார்” என்று கூறுகிறார்.
அதே கேட்டு பலமாக சிரித்தான் தேவேந்திரன்.
“கற்பக விருட்சமும், காமதேனுவும், நவ நிதியமும், இதர பலவகை செல்வங்களும் மலை போல பெற்று செல்வச் செழிப்போடு இருக்கும் என்னிடத்தில் ஒரு அருகம்புல்லுக்கு ஈடான பொருளை பெற்று வரும்படி அனுப்பி உன் கணவன் எங்களை ஏளனம் செய்கிறானா?”
தனக்கும் தனது கணவருக்கும் இப்படி ஒரு அவமதிப்பு நடப்பதை கண்டு கலங்கும் ஆசிரியை, “தேவேந்திரா அவர் நோக்கம் நான் அறியேன். என் கணவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியே இங்கு வந்துள்ளேன். முடிந்தால் இந்த அருகிற்கு ஈடான பொன்னை கொடு அல்லது இல்லை என்று சொல்லிவிடு” என்கிறாள்.
“என்ன… இந்திரலோகத்திற்கு யாசகம் பெற வந்த ஒருவர் பொருளை வாங்காது திரும்ப செல்வதா? அது எனக்கு பெரும் இழுக்கல்லவா? இதோ ஒரு நொடியில் நீ கேட்டதை தருகிறேன்!” என்று கூறி இந்திரலோகத்தின் கருவூலத்திற்கு அதிபதியான குபேரனை அழைக்கிறான்.
“இவர்கள் கேட்டதை போல இந்த அருகம்புல்லிற்கு ஈடான பொன்னை உடனே கொடு” என்று கட்டளையிடுகிறான்.
கையில் ஒரு சிறிய தராசை வைத்து அருகம்புல்லை அதன் ஒரு தட்டிலும் மறுபக்கம் ஒரு தங்கக் காசையும் வைக்கிறான் குபேரன். அனைவரும் வியக்கும் வண்ணம் அருகம்புல் இருந்த தட்டு கீழே தாழ்ந்து சென்றது. பொற்காசு வைக்கப்பட்ட தட்டு மேலே எழுந்து நின்றது.
இந்த பக்கம் மேலும் ஒரு தங்கக் காசை வைத்தான் குபேரன். அப்போதும் அருகம்புல் இருந்த தட்டு அசைந்துகொடுக்கவில்லை.
காசுகளை அப்படியே கூட்டிக்கொண்டே போனான். ஒரு கட்டத்தில் வேறு ஒரு பெரிய துலாபாரத்தை கொண்டு வரச் செய்து ஒரு பொற்காசுகள் அடங்கிய மூட்டையையே வைத்தான். அப்போதும் அப்படியே தான் இருந்தது அருகு வைக்கப்பட்டிருந்த பக்கம்.
நடப்பதையெல்லாம் வியர்க்க விறுவிறுக்க பார்த்துக்கொண்டிருந்த தேவேந்திரனுக்கு கலக்கம் ஏற்பட்டது. அழகாபுரியில் உள்ள அனைத்து செல்வங்களையும் வைத்தால் கூட அருகம்புல் இருக்கும் தட்டு மேலே எழாது போலிருக்கிறதே… என்று கருதியவன் காமதேனு, கற்பக விருட்சம் என தேவலோகத்துக்கு செல்வங்களை எல்லாம் அதில் அடுக்கினான். அப்போதும், அருகு இருந்த தட்டு அசைந்துகூட கொடுக்கவில்லை.
கடைசியில், மொத்த தேவலோகத்தையும் வைப்பதற்கு ஒப்பாக தனது கிரீடத்தை தராசில் வைத்தான். அப்போதும் தட்டு அசைந்துகொடுக்கவில்லை.
நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள் உள்ளிட்ட இந்திராதி தேவர்கள் அனைவருடனும் தானும் தராசில் ஏறி நின்றான்… அப்போதும் ஒரு பயனும் ஏற்படவில்லை.
அடுத்து மும்மூர்த்திகளையும் உதவிக்கு அழைத்தான். அவர்களும் உடனே வர, பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது மனைவிமார்களுடன் ஏறி நின்றனர். அப்போதும் அருகு இருந்த தட்டு மேலே எழவில்லை.
கடைசியில் ஞானதிருஷ்டியை கொண்டு, நடந்த அனைத்தையும் அறிந்துகொள்கிறான் இந்திரன். (ஞான திருஷ்டியை தேவையின்றி பயன்படுத்தினால் தவவலிமை குறையும். எனவே அவசியமான சூழலில் மட்டுமே அதை பயன்படுத்துவர்!) விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு அந்த அருகு மேன்மை பெற்றிருக்கிறது என்றும், அதற்கு ஈடாக இந்த உலகில் ஒன்றும் இல்லை என்றும் புரிந்துகொள்கிறான்.
உடனே மும்மூர்த்திகள் புடைசூழ இந்திராதி தேவர்களும் பூலோகத்தில் உள்ள கௌண்டின்யரின் ஆஸ்ரமத்தை அடைகின்றனர். முப்பத்துமுக்கோடி தேவர்களும் அருந்தவம் செய்தாலும் காண முடியாத மும்மூர்த்திகள் புடைசூழ தமது ஆஸ்ரமத்தில் எழுந்தருளியிருப்ப்பதை கண்டு கண்கலங்கினார் கௌண்டின்யர்.
அவர்கள் முன்பாக அப்படியே நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி…. விநாயகரை நோக்கி இவ்விதம் கூறலானார்…. “முழுமுதற் கடவுளே… உன்னை அனுதினமும் அருகைக்கொண்டு அர்ச்சித்து வரும் அடியேனின் அருமை பெருமைகளை இவ்வுலகிற்கு உணர்த்தவே இவர்களை என் வீட்டிற்கு அனுப்பினாயோ?” உன் திருவிளையாடல் தான் என்ன….” என்று பலவாறாக உருகினார்.
சிவபெருமான் அவரை நோக்கி : “கௌண்டின்ய மகரிஷியே… அருகம் புல்லிற்கு இருக்கும் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்று தான் நீங்கள் உங்கள் பத்தினியிடம் ஒரு அருகை கொடுத்து அதற்கு ஈடான பொன்னை பெற்றும் வரும்படி கூறினீர்கள். அண்டசராசரத்தில் உள்ள உள்ள அனைத்து செல்வங்களையும் சேர்த்து கொடுத்தாலும் கூட முழுமுதற்கடவுள் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு அவை ஈடாகாது. அப்படியிருக்க தினமும் அவரை எண்ணற்ற அருகம்புற்களால் அர்ச்சித்து வரும் நீங்கள் செய்த பேற்றை நாம் விளக்கவும் வேண்டுமா?” என்று கூறிவிட்டு அவருக்கு வேண்டிய வரங்களை தந்து மகிழ்ந்தார். தொடர்ந்து பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் அவருக்கு வரங்களை தந்து மகிழ்ந்தனர்.
அன்று முதல் காமதேனு, கற்பக விருட்சம் முதலியன கௌண்டின்யரின் ஆஸ்ரமத்திற்கு வந்து தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்துவந்தன. கௌண்டின்யரின் பத்தினியான ஆசிரியையும் விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லிற்கு உள்ள மகத்துவத்தை தெரிந்துகொண்டு தனது கணவருக்கு அவரது பூஜைகளில் பணிவிடை செய்து வாழ்ந்து வந்தார்.
இனி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தும்பிக்கையானுக்கு அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்துவாருங்கள். பிள்ளையார் கோவிலுக்கு செல்லும்போது அருகை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். பசுவிற்கு அருகம்புல்லை வாங்கி கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறி உங்கள் துன்பத்தில் இருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்பது திண்ணம். உங்கள் பக்தி எளிமையோடும் உள்ளன்போடும் இருந்தால் போதுமானது.

No comments:

Post a Comment