Wednesday, 24 September 2014

ஸ்ரீ மகா கணபதி


 


                      ஸ்ரீ   மஹா கணபதி 

                           பல்லவி

               காத்தருள்வாய் ஸ்ரீ மகாகணபதி

               பிரார்த்தனை செய்துனை மனமாரத் துதித்தேன்

                            அனுபல்லவி

               மூத்தவனே சிவ பார்வதி மைந்தனே

              தோத்திரம் செய்திடுமடியார்க்கருள்பவனே

                             சரணம் (1)

              நாற்றிசையும் போற்றும் கேசவன் மருகனே

              மாற்றுரைத்தவனே கந்த சோதரனே

              ஊற்றாய்ப் பெருகும் கருணைக் கடலே
                 
              ஏற்றமிகு ஆரூரில்  வீற்றிருப்பவனே

                           சரணம்(2)

               திங்கள் பிறையணிந்த பங்கய பதத்தானே

                மங்கல  வெண்பட்டாடை அணிந்தவனே

                அங்குச பாசம் மோதகம் தந்தம்

                கரங்களிலேந்தும்  பெருவயிற்றோனே

                             சரணம் (3)

                முங்கிடச்செய்யும் பொங்கும் பவக்கடல் தனையே

                 கடந்திட உதவிடும் துங்கக் கரிமுகனே

                 இயலிசை நாட்டிய நாடக ரசிகனே        

                 முழுமுதற் கடவுளே  ஆனை முகத்தோனே

                               சரணம் (4)        
         

                 காவியத் தலைவனே  எலி வாகனனே 

                 கோடிக் கதிரவனை மிஞ்சும் தேசுடையவனே

                 தேவரும் முனிவரும்  நந்தியும் கணங்களும்

                  மூவரும் யாவரும் துதித்திடும்  மெய்ப்பொருளே      





               ************             ******       **************

    ஸ்ரீ   முத்துசாமி   தீட்சிதரின்  கௌள  ராக  கீர்த்தனையின் சாராம்சம்
   ( Thanks to Smt.Kalamalini Sundararajan)
ஸ்ரீ மஹாகணபதி என்னை என்னை ரக்ஷிக்கட்டும். சகல சித்திகளையும் அருளச்செய்யும் ஆனைமுகத்தைஉடையவர். மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரும்மா, இந்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்படுபவர். திருவாரூரில் இருக்கும் கமலாலயக் குளக்கரையில் அமர்ந்திருப்பவர். அழகுமிக்க தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர். குருகுஹனான அழகு முருகனின் சகோதரன் சிவகுமாரன்.
தங்கத்துக்கு மாற்றுரைத்த உரைக்கல்லாக வடிவெடுத்த கணேசர், தாமரைபூக்களின் மீது நடனமாடுபவர், வெண்பட்டாடை அணிந்தவர், தன்நெற்றியில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர்பெற்றவர், மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப் படுபவர், தன் வயிற்றினில் உலகனைத்தும் அடக்கிஅ தனால் பெருவயிறு படைத்தவர், கைகளில் கருநெய்தல் மலர், தந்தம், பாசக்கயிறு, அங்குசாயுதம், மோதகம் ஆகியவற்றை வைத்திருப்பவர், எப்பொழுதும் ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர், பிறவிப் பெரும்கடலை கடக்க மனிதர்களுக்கு ஓடமாகி கரைசேர்ப்பவர், எல்லாவற்றிர்க்கும் முழு முதற்கடவுளாக இருப்பவர், வணங்கியவர்களுக்கு மங்களத்தை அளிப்பவர், கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர், கவிகளால் புகழப்படும் மூஞ்சூற்றினை தன் வாகனமாகக் கொண்டவர், தேவர்களால் சூழப்பட்டு பணிந்து வணங்கப்படுபவர், ஜீவாத்மா- பரமாத்மா உறவின் கடைசி நிலையான ஐக்கியத்தை
அருள்பவர், இப்படியெல்லாம், புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டும்

No comments:

Post a Comment