Saturday, 20 September 2014

தத்துவ கணபதி



         தத்துவ கணபதி 


               பல்லவி

       வித்தகர் போற்றும் தத்துவப் பொருளை

      விக்னவினாயகனை மனமாரத் துதித்தேன்

                அனுபல்லவி

        மத்தள வயிற்றானை கேசவன் மருகனை

        அமுத குடமுடைய  ஐந்து கரத்தானை

                    சரணம்
        மன யானை தனையடக்க அங்குசமும் பக்தர்களின்

        எதிரிகளை கட்டப் பாசக்கயிறுமேந்தும்

        ஒற்றைக்கொம்பனை  பாரதமெழுதிய

        கரிமுகனை மோதகக் கையனை கணபதியை






விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்களிருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும். புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்துக் களைத்துத் தன்னைச் சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பைப் போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார். அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால்தான் முகம் யானை வடிவில் இருக்கிறது. பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளைக் கட்டிப் போடுகிறார். ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment