பகவான் விஷ்ணுவின் பாதங்களைத் தாமரைப் பூவுக்கு ஒப்பிடுகிறார் நம் பகவத்பாதர்கள்.
ஸ்ரீபதி பதாரவிந்தே ‘பத அரவிந்தம்’ என்றால் திருவடித் தாமரை. ஸ்ரீ என்றால் மஹாலக்ஷ்மி. ஸ்ரீபதி – லக்ஷ்மி நாராயணன். ஸ்ரீபதிக்குத் தாமரைப் பாதமிருப்பது மிகவும் பொருத்தம். ஏனென்றால் லக்ஷ்மிக்கு தாமரைப்பூ ஸம்பந்தம் ரொம்பவும் ஜாஸ்தி.
பத்மப்ரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாயதாக்ஷி
என்று அவளை ஸ்தோத்ரம் செய்வார்கள். அவளுக்கு தாமரைப் பூவிடம் ப்ரியம் அதிகம். ஆகையால் “பத்மப்ரியே!” பத்மினி என்றால் தாமரைக்கொடி. மஹாலக்ஷ்மி இப்படித்தான் ஸெளகுமார்யத்தால் துவண்ட கொடியாக இருக்கிறாள். பெண்களில் உத்தமமான லக்ஷணம் உடையவர்களை ‘பத்மினி ஜாதி’ என்பதே வழக்கம். ‘பத்மினி’ என்றால் பத்மங்களை உடையவள் என்றும் அர்த்தம் செய்துகொள்ளலாம்.
லக்ஷ்மி நித்யவாஸம் செய்வதாக ஐந்து இடங்கள் உள்ளன. தாமரைப் பூவின் மத்தி, யானையின் மஸ்தகம் (தலை) , பசுவின் பின்புறம், வில்வ இலையின் பின்பக்கம், ஸுமங்கலிகளின் ஸீமந்தம் (வகிடு) என்பவை இந்த ஐந்து. இப்படி ஐந்து இருந்தாலும் எல்லாருக்கும் தெரிந்தது அவள் தாமரைப்பூவில் உட்கார்ந்திருக்கிறாளென்பதுதான். படங்களில் அப்படியே போட்டிருக்கிறது. சில்பங்களும் அப்படித்தான் இருக்கின்றன. அதனால்தான் “பத்மாலயே!” என்றது.
அவளுடைய நான்கு கைகளில் இரண்டில் இரண்டு தாமரைப்பூவை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆகையால் “பத்மஹஸ்தே!” அவளுடைய கண்கள் விரிந்த தாமரை இதழ்போல இருக்கின்றனவாதலால் “பத்மதளாயதாக்ஷி”. அவளுடைய முகமும் தாமரை போன்றது. இந்த ச்லோகத்தில் அதைச் சொல்லாவிட்டாலும் (லக்ஷ்மி) அஷ்டோத்தரத்தில் “பத்ம முகி” என்று இருக்கிறது.
பத்ம ஸம்பந்தமாகவே அதிலும் அநேகம் பெயர்களைச் சொல்லியிருக்கிறது. தாமரைப் பூவாலேயே மாலை போட்டுக் கொண்டிருக்கிறாளாம் – “பத்ம மாலாதரா”. அவளுடைய திவ்ய தேஹம் தாமரை போன்ற வாஸனை வீசுகிறதாம் – “பத்ம கந்திநி”. இவள் “பத்ம ப்ரியா”வாகத் தாமரையிடம் ப்ரியம் வைத்துள்ளது போல இவளிடம் ப்ரியம் வைத்திருப்பது யாரென்று பார்த்தால் அது நாபியிலேயே ஒரு தாமரையை மலர்த்திக் கொண்டிருக்கிறவனாக இருக்கிறது – “பத்மநாப ப்ரியா” என்று அஷ்டோத்தரம் சொல்கிறது. ‘பத்மாவதி’, ‘கமலா’, ‘அம்புஜா’, ‘பங்கஜா’ என்றெல்லாம் தாமரையை வைத்தே லக்ஷ்மிக்குப் பெயர்கள் இருக்கின்றன. இதற்கேற்றாற்போல் அவளுடைய பதி, ஸ்ரீபதியின் பதம் தாமரையாக இருக்கிறது. ஸ்ரீபதி பதாரவிந்தே. அரவிந்தாஸனையான லக்ஷ்மி க்ஷீராப்தியில், சேஷ பர்யங்கத்தில் பகவானின் பாதாரவிந்தத்தைத்தான் பிடித்துக்கொண்டிருக்கிறாள். அவளையும் இந்த ச்லோகத்தில் சொல்லாமல் சொல்லி தம்பதி ஸமேதராக தர்சனம் பண்ணி வைக்கிறார்.
கமலநாபன்….
பல்லவி
கமலநாபன் பாதங்களைப் பணியும்
கமலமே உந்தன் கமல பதம் சரணம்
அனுபல்லவி
கமல கரத்தாளே கமலாசனியே
கமலக்கண்ணன் கேசவன் நாயகியே
சரணம்
கமல மலரேந்தும் கமல முகத்தாளே
கமல மலர் மாலைதனையணிந்தவளே
கமல நயனமும் வாசமும் கொண்டு
கமல வனம் போல் காட்சியளிப்பவளே
No comments:
Post a Comment