*ஸ்ரீ சுப்பிரமணியர் திருவிருத்தம்.*
கண்ணேறு வாராது பிணியன்று சேராது
கவலைப் படாது நெஞ்சம்
கலியாது சலியாது நலியாது மெலியாது
கலியென்ற பேயடாது
விண்ணேறும் அணுகாது கன்மவினை தொடராது
விஷமச் சுரம்வராது
வெய்ய பூதம் பில்லி வஞ்சனைகள் தொடரா
விடம் பரவு செந்துமடரா
எண்ணேறு சனனங்கள் கிடையாது காலபயம்
எள்ளளவுமே இரா(து)இவ்
ஏழைக் கிரங்கியருள் தெய்வமுனை யல்லாமல்
இன்னமொரு தெய்வமுளதோ!
தண்ணேறு கங்கைமலை மங்கை அருள் தங்கமே
சரச கோபாலன் மருகா
சதுர்மறைகளே தந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே
இந்தப் பதிகத்தை அருளியவர் *தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்* எனும் பேரருளாளர். தம் மீது மிகவும் அன்புகொண்ட பக்தர் ஒருவருக்கு ஏற்பட்ட குஷ்ட ரோகம் என்னும் கொடிய நோயை நீக்கியருளும்படி முருகப்பெருமானை வேண்டி சுப்பிரமணிய முனிவர் பாடியதுதான் இந்தப் பதிகம்.
அந்த அன்பரும் இதனைப் பாராயணம் செய்து நோய் நீங்கி இன்புற்றார் என்பது வரலாறு.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வண்ணமயிலேறும்…..
பல்லவி
வண்ணமயிலேறும் அண்ணலே முருகா
வெண்ணிலவுப் பிறையணிந்த உமையவள் மைந்தனே
துரிதம்
சரவணபவனே சிவகுரு நாதனே
அனுபல்லவி
கண்ணன் கேசவன் மருகனே குமரா
மண்ணிலுனை மனமாரத் துதிப்பவர்க்கெல்லாம்
சரணம்
கண்ணடி படாது பிணியிடர் சேராது
பெண்ணாசை மண்ணாசை பேராசை வாராது
விண்ணேறுமணுகாது இருவினைகள் தொடராது
எண்ணற்ற ஜனனமும் மரணமும் கிடையாது
பில்லி சூனியம் வஞ்சனைகள் அணுகாது
வல்ல பூதங்கள் விஷமச் சுரம் ஓடிவிடும்
கலியென்ற பேயுமருகிலண்டாது
கவலைகள் கால பயமெதுவும் வாராது
No comments:
Post a Comment