Wednesday, 22 December 2021

திருப்பெருந்துறை சிவனே…..

 பாடல் எண் : 04

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் 

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால் 

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் 

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 

எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

பாடல் விளக்கம்‬:

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையை யுடையவரும் யாழினையுடையவரும் ஒரு பக்கத்தில், வேதங்களோடு தோத்திரம் இயம்பினர் ஒருபக்கத்தில்; நெருங்கிய தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்தில்; வணங்குதலை உடையவரும், அழுகை உடையவரும், துவளுதலை உடையவரும் சூழ்ந்து ஒரு பக்கத்தில்; தலையின் மீது, இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக் கெல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.


                                    திருப்பெருந்துறை சிவனே…..


                                                         பல்லவி

                                   திருப்பெருந்துறை சிவனே பள்ளி எழுந்தருள்வாயே

                                   வருந்தித் துதித்திடும் எனையாண்டருள

                                                       அனுபல்லவி 

                                   கருநிறத்தழகன் கேசவன் நேசனே

                                   இருவினைப் பயன் தொலைய அனைவரும் வணங்கிடும்

                                                           சரணம்

                                   அருமறையோதும் வேதியர் ஒருபுறம்

                                   சுருதியுடனிசைதரும் யாழிசை ஒருபுறம்

                                   நெருக்கமுடன் தொடுத்த மலர் மாலையேந்தி

                                   விரும்பி வணங்கிட இருப்பவரொருபுறம்


                                   வருமிடர் கவலைகள் நீங்கிட வேண்டியே

                                   இருகை கூப்பி தொழுபவரொருபுறம்

                                   இருவிழியில் கண்ணீருடனடியவரொருபுறம்

                                   திருவடி பணிந்திடுமனைவருக்குமருள் புரிய


                                   

                                   

                                    


     

No comments:

Post a Comment