ஶ்ரீஶாக்த மஹாபீடங்கள் 3:
கன்யாஶ்ரமம் எனும் கன்யாகுமரி ஶ்ரீமஹாபகவதி : ஶ்ரீயந்த்ர த்ரிகோண நிலயையான ஶ்ரீமாதா அகண்ட பாரதவர்ஷத்தில் அனேக ஸ்தானங்களில் ப்ரகாசிக்கின்றாள். பாரத வர்ஷமே த்ரிகோணமாக ஶக்தி கேந்த்ரமாகத் தான் விளங்குகின்றது என்பது ப்ரஸித்தம்.
ஶக்தி பீடங்களில் மிக முக்யமான பீடம் கன்யாஶ்ரமம் எனும் கன்யாகுமரி. ஸாக்ஷாத் ஸதி தாக்ஷாயணியனித் தாயாரின் ப்ருஷ்ட பாகம் விழுந்த க்ஷேத்ரம். அம்பிகையின் நாமம் "ஶ்ரீஶர்வாணி" என்பதும் தேவிக்கு காவலாக விளங்கும் பைரவரின் நாமம் "ஶ்ரீநிமிஷர்" என்பதுமாம்.
ஐம்பத்தோரு பீடங்களில் முக்யமான பீடம். தேவீ மஹாதுர்கையாகவே ஆவாஹனம். பரஶுராமர் ப்ரதிஷ்டித்த நூற்றெட்டு துர்காலயங்களுள் ஒன்று. கன்யாகுமரி "பாலாம்பிகா" என்றே ப்ரஸித்தமாய் விளங்கும் சைதன்ய மூர்த்தி.
ஆதிஶங்கர பகவத்பாதாள் விஶேஷமாக ஶ்ரீயந்த்ர ப்ரதிஷ்டை செய்த க்ஷேத்ரம். அனேக மஹிமைகளுடன் ஶ்ரீமாதா விளங்கும் க்ஷேத்ரம்.
"கன்யாகுமாரீம் வந்தேஹம் கர்பவாஸ நிவாரிணீம் ஸர்வாங்க சுந்தரீம் அம்பாம் நித்ய கல்யாண வைபவாம்"
"கன்யகா பரமேச்வரியும், கர்பவாஸத்தை ஒழித்து கைவல்ய மோக்ஷத்தை வழங்குபவளும், ஸர்வாங்கஸுந்தரியான ஶ்ரீமாதாவும், பரம மங்களத்துடன் என்றும் விளங்கும் பகவதியையே ஸதா ஸ்மரிப்போம்"
தன்னைத் தானே நினைத்து யோக நிலையில் தவமிருக்கும் ஆதிஶக்தி இவள். ஊருஹஸ்தத்துடன் விளங்குவதால் இவள் ராஜராஜேச்வரி. அக்ஷமாலை வரதஹஸ்தத்தில் பொலிவதால் ஞான ப்ரதான்யமான சைதன்ய மூர்த்தி இவள்.
திருவாரூரில் கொலுவிருக்கும் மஹாபராஶக்தியான ஶ்ரீகமலாம்பாள் ஒருகால் மேல் மறுகால் போட்டுக்கொண்டு ஊருஹஸ்தம் விளங்க மஹாயோகத்தில் ஆழ்ந்திருப்பாள். ஸுமேருவின் பிந்துவில் ஶ்ரீதேவியினுடைய பீடம்.
அது போல் கன்யாஶ்ரம மஹாஶக்தி பீடத்தில் ஶ்ரீராஜராஜேச்வரி ஊருஹஸ்தத்துடன் ஆத்மஶக்தியாக தன்னைத் தானே த்யானித்துக் கொண்டு ப்ரகாசிக்கின்றாள்.
யோகிகளுக்கு முக்யமான பீடம் கன்யாஶ்ரம க்ஷேத்ரம். அம்பிகை பாணாஸுரன் எனும் அஸுரனை வதைத்து உலகிற்கு மங்களத்தை உண்டு செய்த க்ஷேத்ரம்.
சிதக்னி குண்டத்தில் ஶ்ரீலலிதாம்பாளாக அம்பாள் தோன்றி, பண்டமஹாஸுரனை ஸம்ஹரித்தது போல், முக்கடல் ஸங்கமிக்கும் கன்யாகுமரி க்ஷேத்ரத்தில் தேவர்கள் யாகம் பண்ண, அந்த யாகத்தில் அயோநிஜையாக ஶ்ரீதேவி தோன்றி அஸுர ஸம்ஹாரம் செய்தாள் என்று அந்த க்ஷேத்ரத்தின் சரித்ரம்!!
"பாலபத்ரா" எனவும் "பாலா" எனவும் ஶ்ரீபரமேச்வரி இங்கே அழைக்கப்படுகிறாள்.
மிகப்ராசீனமான மஹாஶக்தி பீடம் ஸாக்ஷாத் கன்யாகுமரி க்ஷேத்ரம் என்பது இதிஹாஸமான "மஹாபாரதம்" மற்றும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான "மணிமேகலை" மூலமாகவும் தெரிகிறது.
காஶி க்ஷேத்ரத்தில் விளங்கிய ப்ராஹ்மனன் ஒருவரின் மனையாட்டியான "அபஞ்சிகை" எனும் பெண் தன் தவறான நடத்தையால் மஹாபாதகத்திற்கு ஆளானாள். உலகோரின் பழிப்பினால் நொந்த அவள் தன் பாபங்களைத் தொலைப்பதற்காக, காஶி க்ஷேத்ரத்திலிருந்து கால் நடையாகவே அனைக க்ஷேத்ரங்களுக்குச் சென்று, பின் இறுதியில் ஶ்ரீபகவதி பொலியும் கன்யாகுமரி க்ஷேத்ரத்திற்கு வந்தாள். அங்கிருக்கும் தீர்த்தங்களில் மூழ்கி அவள் ஸமஸ்த உலகிற்கும் தாயாரான ஶ்ரீகன்யாகுமரியை நினைத்துத் தவமிருந்தாள். பகவதியின் அருட்ப்ரஸாதத்தால் ஸகல பாபங்களும் ஒழிந்து அவள் முக்தியையும் அடைந்தாள்" என்பது மணிமேகலை உரைக்கும் கன்யாகுமரியின் வைபவம்.
பகவதியின் அருட்ப்ரஸாதம் பாபிகளையும் புண்யாத்மாக்களாக்கி முக்தியையும் வழங்கும். ஶர்வாணி ஶக்தி பீட நாயகியை வணங்கி, அடுத்த பதிவில் அவள் பாணாஸுரனை ஒழித்து பின் ஆத்ம யோகத்தில் மூழ்கி விளங்கும் விஷயத்தையும் சிந்திப்போம்!!
கன்னியாய் குமரிமுனையில்….
பல்லவி
கன்னியாய் குமரி முனையில் தவம் செய்யும்
கன்னியாகுமரியின் மலர்த்தாள் பணிந்தேன்
அனுபல்லவி
தன்னையே தான் நினைத்து யோகத்திலமர்ந்திருக்கும்
அன்னையை அம்பிகையைக் கேசவன் சோதரியை
சரணம்
கன்னிகா பரமேச்வரியாய் கரம்தனை தொடையில் வைத்து
இன் முகம் காட்டி அக்ஷ மாலை ஏந்தி
சின் முத்திரை உடனே காட்சி அளித்திடும்
திரிபுரசுந்தரியை சக்தி பீட நாயகியை
No comments:
Post a Comment