பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி சிறப்பு பதிவு:
காமேஸ்வரர் - காமேஸ்வரி:-
சிவனுடையதும் சக்தியினுடையதும் மிக உயர்ந்த வடிவம் மகா காமேஸ்வரன் மகா காமேஸ்வரி எனப்படும். அவர்கள் எல்லையற்றதும் நித்தியமானவர்களும் ஆவர். நித்திய நிலையில் அவள் "ப்ரகாச விமர்ச மஹா மாய ஸ்வரூபினி" என அழைக்கப்படுகிறாள். இருவரும் நித்திய வடிவில் நான்கு கைகளுடன் ஒரே ஆயுதங்களை ஏந்திய வண்ணம் உள்ளார்கள். அவர்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் - பாசம், அங்குசம், கரும்பு வில், மலர் அம்புகள் என்பவையாகும். இருவரது கிரீடத்திலும் சந்திரன் உள்ளது. மகா காமேஸ்வரர் துய, பளிங்கு போன்ற, நிறமற்ற வடிவானவர்.
சிம்ஹாசனத்தில் அமர்ந்து இடது காலை மடித்து வலது காலை நிலத்தில் ஊன்றியவண்ணம் இருக்கிறார், தேவி சிவப்பு நிறமுடைய அதீத அழகுடையவள், புன்னைகையினை வீசியவண்ணம் விளையாட்டுத்தனமும், அருளும், பக்தர்களின் பிரார்த்தனையினை எப்போதும் கேட்கும் நிலையில், காமேஸ்வரரை நோக்கி வெட்கத்துடன் நடக்கின்றாள். அவளது ஒவ்வொரு அடியும் காமேஸ்வரரை நோக்கி நகர அவரது தூய வெண்மை நிறம் சிவப்பாகிறது. அந்த நடையின் அழகில் அன்னப்பறவைகள் வெட்கிவிடக் கூடிய அழகுடன் கூடியவை. காமேஸ்வரர் தனது அன்பும் காதலும் கலந்த பார்வையினை தேவியின் மீது வீசுகிறார். அவள் அவரது மடித்த இடது துடையின் மேல் தனது வலது துடையினை மடித்து இடது காலை நிலத்தில் உள்ள மாணிக்கங்கள் நிரம்பிய தங்க காலடியில் பதித்து அமர்கிறாள். அவள் அவரது மடியில் அமர்ந்த கணத்தில் அவர் உடல் முழுவதும் சிவப்பு நிறமாகிறது. இருவரது உடலும் பிரகாசமாக ஒளிரத்தொடங்குகிறது.
இதனைக்கண்ட தேவர்கள் அது சூரியனது ஒளியாக இருக்கும் என மயங்குகின்றனர். இந்த தெய்வீக தம்பதியினர் எப்போதும் ஐக்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர், அதனாலேயே சஹஸ்ர நாமத்தின் இறுதியில் வரும் நாமங்களில் ஒன்று "சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி" என்று குறிப்பிடுகிறது. இந்த நாமத்தில் விளக்கமே மேலே கூறப்பட்டது. இந்த வடிவம் நித்தியமானது. சிவ ஸக்தி ஐக்கியத்திற்கு மேற்பட்ட நித்திய நிலை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகா என்ற நாமத்துடன் முடிவுறுகின்றது. அப்படியானால் லலிதாம்பிகை ரூபம் சிவ சக்தி ஐக்கிய ரூபத்தினை விட உயர்ந்ததா? என்றால் அதற்கான பதில் "ஆம்" என்பதே, அப்படி இல்லாமல் அந்த நாமத்தினை வாக் தேவிகள் இறுதியாக சேர்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் "சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி" என்ற நாமத்தினை இறுதியாக சேர்த்து லலிதாம்பிகை யினை அதற்கு முதலாக சேர்த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
இந்த சஹஸ்ர நாமத்தின் இடையில் "பஞ்ச பிரேத சனசினா" என்றும் "பஞ்ச பிரம்ம ஸ்வரூபினி" என்றும் வருகிறது. முதலாவது நாமத்தின் பொருள் பிரம்மா, விஷ்ணு, சிவன், மகாதேவன், சதாசிவன் ஆகிய ஐவர் மேலும் அமர்ந்திருப்பவள் என்பதாகும். இதன் ஆழ்ந்த பொருள் பற்றி முன்பு விபரித்தேன். பிரம்மா - படைத்தல், விஷ்ணு - காத்தல், சிவன் - அழித்தல், மஹாதேவன்- அறியாமையினை, மாயையினை அகற்றுபவர், சதாசிவன் - ன் ஞானத்தினை வழங்குபவர். இந்த ஐவர் மேலும் லலிதை அமரும் போது அவளது ஆற்றல் மனிதனால் விளங்கமுடியாத அளவிற்கு அதிகரிக்கிறது. அவளே எல்லையற்றவள், எல்லாமும் ஆனவள், நான் ஆக இருப்பவள், நீயாக இருப்பவள், கேட்பதையெல்லாம் தரக்கூடியவள். ஒவ்வொருவருடைய சொந்த தாய் போல் அணுகக்கூடியவள், அவளது எல்லையற்ற ஆற்றலின் முன் பணியும் போது மிகுதியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவளே மிக உயர்ந்த கல்வி, சிவம் சார்ந்ததாகவும் சக்தி இயக்கமாகவும் இருக்கிறாள். சிவம் அமைதியானதும் அசைவற்றதும், சக்தி இயக்குபவளும், பிரகிருதி அல்லது மாயை எனப்படுகிறாள். சிவம் ஆத்மா என்றால் சக்தி எமது கர்மத்திற்கும் செயலுக்கும் ஆதாரமான மனமும் உடலும் போன்றது.
லலிதா சஹஸ்ர நாம தியான ஸ்லோகம் இத்தகைய தேவியின் முழுமையான ரூபத்தினை தியானிப்பதற்கான உருவத்தை விளக்குகிறது. அவளை தியானிப்பதால் நாமும் அவளாவோம்.
அம்மையுமப்பனுமாய்க்…….
பல்லவி
அம்மையுமப்பனுமாய்க்காட்சியளித்திடும்
உம்மைத் துதித்தேன் எனக்கருள வேண்டுமென
துரிதம்
அம்புலி கங்கை சூரியன் சந்திரன்
தும்புரு நாரதர் நான்முகனிந்திரன்
நந்தி கணங்கள் சுக சனகாதியர்
கந்தன் கணபதி அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
தம்மை நினைந்திடுமடியார்க்கு நலமருளும்
தன்மையுடையவனே கேசவன் நேசனே
சரணம்
அம்மையுமை அடியெடுத்து அருகில் நெருங்கி வர
பெம்மானின் வெண்மை செம்மை நிறமானது
அன்னம் போல் நடந்துவரும் உமையவளின் மீது
காமேச்வரர் தன் காதல் பார்வை வீசினார்
மடித்து வைத்த சிவனாரின் இடது துடை மீது
அடுத்து வந்த ஈச்வரி தன் வலது துடைதனை
இடது காலை மாணிக்கம் பரப்பிய தங்கக் கலடியில்
எடுத்து வைத்து ஒளி வீச மடிமீதமர்ந்தாள்
No comments:
Post a Comment