கதம்ப வனத்தில் கோவில் கொண்டவளே
காருண்ய பார்வை நோக்கி எனக்கு அருள்பவளே
கிளியை கையில் ஏந்தி அற்புத காட்சி தருபவளே
கீர்த்தியை போற்றி பாடல்கள் எழுத அருள்பவளே
குறிஞ்சி மலர் போல் நீல வண்ண பூக்களால் பூஜிக்கிறேன்
கூந்தல் அலங்காரத்தில் மாம்பழ கொண்டையில் அற்புத தரிசனம் தந்தாய்
கெட்டியாக உன் தாமரை பாதங்களை பிடித்துகொண்டேன்
கேட்டிடுவாய் என் வேண்டுகோளை
கருணை கடல் போன்றவளே
கைகளால் மணமிக்க பூக்களை அள்ளி பொழிந்து உனக்கு புஷ்பாஞ்சலி செய்திடுவேன்
கோரியதை உடனுக்குடன் நிறைவேற்றி மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பவளே கௌரி காமாக்ஷி விசாலாக்ஷி குங்குமநாயகி மீனாக்ஷி என பல பெயர்களால் ஆசையோடு அழைத்திடும் எனக்கு உன் பொற்பாதங்களில் அடைக்கலம் தந்திடுவாய் மாதே திரிபுரசுந்தரி
எனையோர் வேடமிட்டு இவ்வுலக அரங்கிலாட விட்டாய்
என்னால் இனியாட முடியாது
திருவுளமிரங்கி ஆடினது
போதுமென்று ஓய்வளிக்க உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா
நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷி யென பல பெயருடன் எங்கும் நிறைந்தவள்
என் மனக் கோயிலிலும் எழுந்தருளிய
தாயே...
மீனாக்ஷி காமாக்ஷி…..
பல்லவி
மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷியென
பல பெயருடையாளே எங்கும் நிறைந்தவளே
அனுபல்லவி
தேனார்மொழியாளே திரிபுரசுந்தரியே
ஆனந்தமளித்திடும் கேசவன் சோதரியே
சரணம்
கதம்ப வனந்தனில் அமர்ந்திருப்பவளே
இதம் தரும் கருணை விழியுடையாளே
கிளியேந்தும் கரத்தாளே கீர்த்திமிகு பாடல்கள்
நான் புனைய நல்லருள் புரிந்திடும் ஈச்வரியே
அலங்கரித்த மாம்பழக் கொண்டையுடனே
அற்புத தரிசனம் அளித்திடும் அழகியே உன்
அரவிந்த பதம் தனை இறுகப் பற்றினேன்
கருணைக் கடலே என் குறை கேட்டிடுவாய்
மலர் தூவி மலர்ப் பதம் பணிந்திடுவேன்
நலமுடன் வரங்களை உடனளிப்பவளே
பலவிதமான பெயர் சொல்லி உனையழைத்தேன்
நிலவணிந்தவளே எனக்கருள்வாயே
வேடங்கள் புனைந்தெனையே பலவிதமாக
ஆடவிட்டாயுலகில் இனியாட முடியாது
ஆடினது போதுமென ஓய்வளித்து நீயே
என் மனக்கோயிலில் எழுந்தருள்வாயே
No comments:
Post a Comment