Wednesday, 5 March 2014

அன்னபூரணி




அன்னபூரணி

பல்லவி

அன்னபூரணி அகிலாண்டேச்வரி
உன்னருள் வேண்டியே உன் பதம் பணிந்தேன்

அனுபல்லவி

சென்ன கேசவன் சோதரி கௌரி
பன்னகபூஷணி பரமதயாகரி

சரணம்

அன்னவாகனி கலைமகள் போற்றும்
புன்னகை முகத்தினளே உமாமகேச்வரி
பன்னகாபரணன் சங்கரன் பங்கிலுறை
அன்னபூரணி அருள் புரிவாயே 1

அன்னையே உன்னையே பணிந்திடுமடியார்க்கு
பொன்னும் பொருளும் புகழும் போகமும்
நன்னலமனைத்தும் அளித்திடும் தேவி
அன்னபூரணி அருள் புரிவாயே 2

மின்னும் அணிமணிகள் ஆபரணங்கள்
பொன்மாலை பூமாலை தாடங்கம் சுட்டி
இன்னும் கைவளையும் கால்கொலுசுமணிந்த
அன்னபூரணி அருள் புரிவாயே 3


அன்புடனனைவர்க்கும் அமுதளிப்பவளே
மென்மலர்க்கரங்களில் பாசாங்குசமும்
நன்மறை நூலும் மாலையுமேந்தும்
அன்னபூரணி அருள் புரிவாயே 4

வன்மமில்லாதவளே வனப்புடையவளே
கன்மவினைதீர்க்கும் காசீபுரவாசி
இன்னிசையில் மயங்கும் திரிபுரசுந்தரி
அன்னபூரணி அருள் புரிவாயே 5

பன்மடங்கொளியுடன் சூரிய சந்திரரை
வென்றிடும் பேரொளியாய் நின்றிடுமன்னையே
உன்னிதழ் கொவ்வைச்செவ்வாயோ கமலமோ
அன்னபூரணி அருள் புரிவாயே 6

மன்மதன் மயங்கிடும் பேரெழிலே தாமரையே
பொன்மகளே தக்ஷன் கர்வம் தணித்தவளே
மென்முலையாளே ஆனந்தம் தருபவளே
அன்னபூரணி அருள் புரிவாயே 7

இன்னருள் தந்திடும் கன்னலே தேனே
முன்வினைப்பயன் நீக்கும் மூவாசைப்பிணி போக்கும்
இன்னமுதே இனியவளே காசீபுரவாசி
அன்னபூரணி அருள் புரிவாயே 8


அன்னையும் பிதாவும் பார்வதியும் சிவனுமென
உண்மையறிந்தே தருமமாய் வேன்டினேன்
 நன்னெறியறிவும் ஞானவைராக்கியமும்
அன்னபூரணி அருள் புரிவாயே 9

நன்மொழியிதனைப் படிப்பவர் கேட்பவர்
அன்பரனைவர்க்கும் குறைவின்றியனைத்து
நன்மையும் கிடைத்து பேரின்பமெய்திட

அன்னபூரணி அருள் புரிவாயே 10













No comments:

Post a Comment