பால்ய
லீலைகள்
(Narayaneeyam Dasakam - 45 - Bala Leela )
பல்லவி
கண்ணா உன் லீலைகளை பண்ணிசைத்துப்பாட
எண்ணி மனம் துணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
வண்ணமிகு மயில் கண்டு வான் கோழியாட
எண்ணம் கொண்டது போல எழுத முயன்றேன்
சரணம்
தண்டை கிங்கிணி யணிந்த காலோசை கேட்க
கண்ணனும் ராமனும் தவழ்ந்து வந்த காட்சியை
புண்ணியம் செய்த யசோதை கோபியர்
கண்டு மகிழ்ந்து பரவசமெய்தினர்
வெண்முத்து பல் தெரிய புன்சிரிப்புதிர்த்து
கொண்டை கண்ணில் விழ கைவளைகள் சரிய
மண்ணில் சென்றவரை அன்னையரெடுத்தணைத்து
மடிவைத்துக் கொஞ்சி பாலூட்டி மகிழ்ந்தனர்
சரிந்திடும் பெருமுலையில் வாய் வைத்துக் கண்ணன்
சிரித்து இடையிடையே மல்லி மொட்டுப் பல்லால்
கடித்ததையும் பொருட்டாகக் கொள்ளாதெசோதை
எடுத்தணைத்து முத்தமிட்டு ஆனந்தம் கொண்டாள்
நாளும் கடந்து செல்லச் சின்னப் பதம் வைத்து
கண்ணன் நடந்து வரும் அழகினைக்கண்டும்
ஆடியும் பாடியுமவன் செய்யும் சாகசங்கள்
அத்தனையும் பார்த்து தன்னிலை மறந்தனர்
வாமனனாய் பிட்சையெடுத்தது போதுமென
கேசவனின்று வெண்ணை பால் தயிரையும்
கோபியரின் மனங்களையும் திருடிக் களித்தான்
ஆயர்குலத்தோரைக் களிப்படையச் செய்தான்
வெண்ணிலவைக் கையில் கொண்டுதர வேண்டுமென்று
கண்ணனடம் பிடிக்க விளையாட்டாய் நந்தகோபன்
அண்ணாந்து அழைக்க தண்மதியும் தாரகையும்
கண்ணன் கையில் வரக்கண்டு தனை மறந்து
புண்ணியம் புரிந்தவனாய் நந்தகோபன் நின்றிருக்க
கண்ணிமைக்கும் நேரம் விஸ்வரூபம் காட்டி
கண்ணன் மாயையினால் அனைத்தையும் மாற்றி
சின்னக்குழந்தையாய் மடியில் கிடந்தான்.
No comments:
Post a Comment