Friday, 28 February 2014

சர்வசித்திவினாயகன்



சர்வசித்திவினாயகன்

பல்லவி

அனைத்துக்கும் முதலான ஆனைமுகத்தோனை
வினையிடர் களைந்திடும் கரிமுகனைத்துதித்தேன்

அனுபல்லவி

சுனைனீராயருள் சுரந்திடுமைங்கரனை
மனதிற்கினியவனை கேசவன் மருகனை

சரணம்

தினையளவு நினைத்தாலும் பனையளவு நலம்தரும்
இனியவனை சிவன் மகனை கணங்களின் தலைவனை
தனையென்றும் சதமென நினைத்திடுமெனது
மனம் பதப்படவே கழலடி சரணடைந்து














திருமால்


Lord's Face Formation on Tirumala Hill


திருமால் 

பல்லவி 

திருமுக தரிசனமொன்றே போதும் 

திருவேங்கடமுடையானே அழகிய உனது 

அனுபல்லவி 

ஒரு குறையுமெனக்கில்லை  கேசவா உனதருளால் 

பெருமைகள் நிறைந்த  திருமலைவாசனே  

சரணம் 

பெரும் பொருள் செல்வம் எதுவும் வேண்டிலேன் 

உருகியுன்  நாமம் மனத்தினில் துதித்தேன் 

தருமநெறி காக்க அவனியிலவதரித்த 

கருணைக்கடலே என்றென்றும் எனக்குன் 


வருமிடர் களைந்து கனிவுடன்காக்கும் 

 திருத்தங்கும் மணி மார்பா தீனசரண்யனே 

இருவினைப் பயன் நீக்கும் ஏழுமலையானே 

கருணைக்கடலே என்றென்றும் எனக்குன் 






வாரணமுகன்



      வாரணமுகன்

பல்லவி

வாரணமுகனை மனமாரத்துதித்தேன்
பேரெழில் அழகனை பரமசிவன் மகனை

துரிதம்

நாரணன் நான்முகன் நமச்சிவயன்
நரர்சுரர் பணிந்திடுமனைத்துக்கும் முதல்வனை

அனுபல்லவி

சூரனை வதம் செய்த முருகனுக்கு மூத்தவனை
மாரனையீன்ற கேசவன் மருகனை

சரணம்

ஆரணப்பொருளை ஆனைமுகத்தோனை
காரணப்பெயர் கொண்ட வேழமுகத்தினனை
பூரணம் பொதிந்த மோதகக்கையனை
பாரெங்கும் புகழ் விளங்கும் ஐங்கரனைக்கரிமுகனை

  .

பெரியகணபதி



பெரியகணபதி

பல்லவி

பெரியகணபதியை மனமாரத்துதித்தேன்
கரிமுகனவனது திருவருள் வேண்டியே

அனுபல்லவி

பரிவுடன் பக்தரைக்காத்திடும் ஐங்கரனை
கிரிதனையேந்திய கேசவன் மருகனை

சரணம்

பொரியவல் மோதகம் விரும்பிடும் சுமுகனை
கிரியரசன் மகள் பார்வதி மைந்தனை
அரியயனரன்பணி ஆனைமுகத்தோனை
வறியவர் குறைதீர்க்கும் வாரணமுகனை







வேலாயுதன்




வேலாயுதன்

பல்லவி

வேலாயுதனை சேவற்கொடியோனை
பாலமுருகனை மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

ஆலிலையில் துயின்ற கேசவன் மருகனை
சூலாயுதமேந்தும் நீலகண்டன் மகனை

சரணம்

நீலமயில்வாகனனை குருபரனை சரவணனை
மேலோர் பணிந்தேத்தும் கார்த்திகேயனை
கோலாகலமாகப் பழனியில் நின்றருளும்
பூலோகம் போற்றும் முத்துக்குமரனை









வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா
பாலமுருகனுக்கு அரோகரா





விஷ்ணு பாதம்



                 விஷ்ணு பாதம்

பல்லவி

பதமொன்றெ சதமென்றும் கேசவா-(உனது)
இதமுடனனைத்து நலங்களுமருளும்

அனுபல்லவி

சதமல்ல இவ்வுலக வாழ்வும் வசதியும்
விதம் விதமான சொந்தமும் பந்தமும்

சரணம்

பதவியும் பொருளும் புகழும் போகமும்
அதன் வழி கிடைக்கும் எதுவும் சதமல்ல
கதலியாய் வாழ்ந்து உதவிகள் செய்து
நிதமுனைப் பணிந்திடும் பக்தருக்கெல்லாம்





கோவிந்த நாமசங்கீர்த்தனம்


   

                         கோவிந்த நாமசங்கீர்த்தனம்



பல்லவி

கோவிந்த நாம சங்கீர்த்தனமே
நாவிற்கினியது மனதிற்குகந்தது

துரிதம்

கோவிந்த மாதவ முரளி மோகன
முகுந்த கேசவ மதுசூதனனெனும்

அனுபல்லவி

தேவமுனி நாரதரும் நான்முகனுமமரரும்
சுகசனகாதியரும் தினம் பாடிக்கொண்டாடும்

சரணம்

மூவாசைப்பிணி போக்க முன்வினைப்பயன் நீங்க
சேவடி பணிந்து மனமாரத்துதித்து
தூவி மலர் சொரிந்து நாள்தோறும் நினந்து
தேவன் கேசவன் அவன் புகழ் பாடும்









Thursday, 27 February 2014

ஆஸ்டின் கணபதி


ஆஸ்டின் கணபதி

பல்லவி

கணினியில் காட்சிதரும் கணபதியைப்பணிந்தேன்
தணிகாசலனின் தமையனைக் கரிமுகனை

அனுபல்லவி

அணிமணியலங்காரம் எதுவுமில்லாமல்
எளிமையாய் வீற்றிருக்கும் விக்ன வினாயகனை

சரணம்

பணிந்திடும் பக்தருக்கு வரமளிப்பவனை
கணங்களின் தலைவனை கேசவன் மருகனை
வணிகமயமான மாயா உலகில்
துணையவன் இணையடி நிழலெனத்துணிந்து



அருணாசலம்






அருணாசலம்

பல்லவி
அருணாசலனைக் கருணாகரனை
திருவண்ணாமலையில் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
திருநாவுக்கரசரும் ஆளுடைப்பிள்ளையும்
மாணிக்கவாசகரும் சுந்தரரும் பாடிய
சரணம்
திருமால் கேசவனும் பிரமனும் தேடிய
நெருப்புருவாய் நின்ற நீலகண்டனை
திருக்கார்த்திகைநாளில் தீபஒளியாகி
அருட்காட்சியளித்திடும் அண்ணாமலையானை



பஞ்சாட்சரம்/ஐந்தெழுத்தான்



         பஞ்சாட்சரம்/ஐந்தெழுத்தான்

பல்லவி

ஐந்தெழுத்தானை நமச்சிவாயனை
பைந்தமிழால் பாடி மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

நைந்துருகியவன் நாமங்களோதி
உய்யவேண்டியவன் பாதம் பணிந்தேன்

சரணம்

பைந்தொடியின் பங்கிலுறை பரமேச்வரனை
மெய்யடியார் நலம் பேணும் மகாதேவனை
ஐயனை ஈசனை கேசவன் நேசனை
வையகம் போற்றும் தேவாதிதேவனை




சதாசிவன்




  சதாசிவன்

பல்லவி
அரவணிந்த பெம்மானை சாம்பசதாசிவனை
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரத்துதித்தேன் துரிதம்
நரர்சுரர் சுரபதி ரதிபதி கணபதி
சரச்வதியின்பதி அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
கரன் முரனை வதம் செய்த கேசவன் நேசனை
புரமெரித்தபரமனைப் பரமேச்வரனை
சரணம்
சிரந்தனில் புனலேந்தும் நெற்றிக்கண்ணனை
பரமதயாகரனைப் பார்வதி நாயகனை
வரம் தரக்காத்திருக்கும் கருணாகரனை
நிரந்தரமானவனை தேவாதி தேவனை


Wednesday, 26 February 2014

மருந்தீச்வரன்




                மருந்தீச்வரன்

பல்லவி

அருள் தரும் சிவனை மருந்தீச்வரனை
திருவான்மியூர்த்தலத்தில் மனமாரத்துதித்தேன்

துரிதம்

பெரும் புகழ் மேவும் திரிபுரசுந்தரி
முருகன் கணபதி பிரமன் பணிந்திடும்

அனுபல்லவி

பெருங்கடல்வண்ணன் கேசவன் நேசனை
அருந்தவ முனிவரகத்தியர் வணங்கிடும்

சரணம்

வருந்துயரனைத்திற்கும் மருந்தென இருப்பவனை
ஒருபாகம் நங்கைக்கு உவந்தளித்தவனை
இருவினைப்பயன் போக்கும் கருணாகரனை
அருமறைகள் போற்றும் வேதபுரீச்வரனை


விநாயகன்



                                                                      விநாயகன்


பல்லவி

தலம் வந்து வலம் வந்து துதிப்பவர்க்கெல்லாம்
உளமுவந்து அருள் தரும் விக்னவினாயகன்

அனுபல்லவி

குலம் கல்வி செல்வமம் வளமானவழ்வும்
கலைகளும் இசையறிவும் ஞானமுமளிப்பவன்

சரணம்

அலைமகள் நாதன் கேசவன் மருகன்
வலக்கையில் வரமுமிடக்கையிலபயமும்
சுலபமாய் வழங்கிடும் தயைமிகு கரிமுகன்
பலரும் முதல் வணங்கும் ஐங்கரன் ஆனைமுகன்



சுமுகன்


சுமுகன் 

பல்லவி 

மகாகணபதியை மனமாரத்துதித்தேன் 

 மகாதேவன் சிவன் மகனைக்கரிமுகனை 

அனுபல்லவி 

அகாலமரணம் பவபயம் களையும் 

  சுகானுபவம் தரும் கேசவன் நேசனை 

சரணம் 

 விகாசமான முகத்தினனை  ஐங்கரனை 

 தகாத அரக்கரை  வதம் செய்தவனை 

 சிகாமணியெனும் சிறப்புடையவனை 

 மகாவிஷ்ணுவின் மருகனை சுமுகனை 


























Tuesday, 25 February 2014

கூத்தாடும் கணபதி

                     
                                                            கூத்தாடும்   கணபதி

                                                              பல்லவி

                                    கூத்தாடும் கணபதியை  நடராசன் மகனை

                                    காத்தருள வேண்டுமென நாளும் துதித்தேன்

                                                                அனுபல்லவி

                                     சாத்திர புராணங்கள் வேதங்கள் போற்றும்

                                      மூத்தவனை முடிவு இல்லாத கரிமுகனை

                                                                  சரணம்

                                       சாத்திய மாலைகளும் மத்தளமுமாட

                                       நேர்த்தியுடன் கைகள் கோலாட்டம் போட

                                       பார்த்தவர்கள் பரவசித்து உடன் சேர்ந்தாட

                                       தோத்திரங்கள் செய்து முனிகணங்களாட


                                        ஏத்தித்துதித்து  சுரரரும் பதியுமாட

                                       வாத்தியங்கள் வாசித்து   அரம்பையருமுடனாட

                                       நாற்றிசையும் நான்முகனும் கேசவனுமாட

                                       போற்றிப் பணிந்து மூஷிகனுமாட

                                       



                                       

                         

































                                 

ஒற்றைக்கொம்பன்




ஒற்றைக்கொம்பன்

பல்லவி
ஒற்றைக் கொம்பனை அழகிய கரிமுகனை
பற்றறுப்பவனை மனமாரப்பணிந்தேன்
அனுபல்லவி
நற்றவ முனிவர்கள் யோகியர் ஞானியர்   
கற்றவர் மனங்களில் வீற்றிருப்பவனை
சரணம்
புற்றுரை ஈசன் மகேசன் மகனை
வெற்றிக்கு வழிதரும் விக்னவினாயகனை
குற்றமற்றானைக் கேசவன் மருகனை
முற்றிலுமிடர் நீக்கும் ஞானவடிவானவனை