வருவாயழகிய…..
பல்லவி
வருவாயழகிய ஆனைமுகத்தோனே
தருவாய் நலமனைத்துமுமையாள் மைந்தனே
துரிதம்
நந்தி கணங்கள் நான்முகனிந்திரன்
அனைவரும் வணங்கிடும் மங்களமூர்த்தியே
அனுபல்லவி
குருவாய் தந்தைக்கு ஓதிய குகசோதரனே
திருமகள் மார்பன் கேசவன் மருகனே
சரணம்
கருமங்களனைத்தும் தொடங்கும் முன்னனைவருமுன்
திருவடி பணிந்திடும் பெருமையுடையவனே
உருவில் பெரியவனே அடியார்க்கு எளியவனே
கருமவினைப்பயனால் கட்டுண்ட எனைக்காக்க
பெருவயிறு படைத்தவனே மோதகப்பிரியனே
வருமிடர் பிணி துன்பமனைத்தையும் களைபவனே
ஒரு கொம்பொடிந்தவனே பிறப்பிறப்பறுப்பவனே
எருது வாகனன் ஈசன் சிவன் மகனே
No comments:
Post a Comment