ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
சுதர்சன சக்ரம்
தீச்சுடரை போன்ற ஒளிபொருந்தியதும்
கோடி சூரியக் கதிரொளியுடையதும்
அரக்கரையழித்திடும் வல்லமை கொண்ட
சுதர்சனமென்னுமுன் சக்கரத்தைத்துதித்தேன்
பாஞ்சஜன்யம் சங்கு
திருமால் கேசவன் பவள வாய்வழிக்காற்று
தருமோசை நிறைக்கும் பாஞ்சஜன்னியத்தை
அரக்கரை நடுங்க வைக்கும் சங்கொலிதனையே
கரம் கூப்பி சிரம் பணிந்து வணங்கித் துதித்தேன்
கௌமேதகம் கதை
பொன்மயமான மேருவின் ஒளியுள்ள
சென்ன கேசவன் விரல்கள் தழுவிடும்
அசுரர் குலத்தையே நடுங்கச் செய்திடும்
கௌமோதகம் என்னும் கதையை வணங்கினேன்
நந்தகம் வாள்
கொடிய அரக்கர்களின் கண்டம் துண்டித்ததில்
வடியும் செந்நிறக் குருதியில் மூழ்கி
நெடிதுயர்ந்து காட்சி தரும்
நந்தகமென்னும் வாளினைப் பணிந்தேன்
சார்ங்கம் வில்
வானுறை தேவர்கள் அச்சம்தனைப் போக்கி
தானெனுமகந்தை கொண்ட அரக்கரை அச்சுருத்தி
நாணொலி கிளப்பி அம்புகளைப்பொழியும்
சாரங்கமெனும் வில்லைச் சரணமடைந்தேன்
சீரும் சிறப்புடனே பரந்தாமன் திருக்கரத்தில்
பாருலகம் போற்றும் வண்ணம் அமைந்திருக்குமிந்த
பேறு பெற்ற ஐந்து படைக்கலங்களைப் போற்றி
ஆர்வமுடன் துதிப்பவர் நலமனைத்தும் பெறுவர்
வனங்களிலும் யுத்த பூமி மத்தியிலும்
அனைத்து இடங்களிலும் அச்சம் நீங்கிட
தினமிந்தத் துதிதனை மனமார உரைப்போர்க்கு
அனந்தன் நாராயணன் பூரண அருள் தருவான்
No comments:
Post a Comment