அனைத்தும் நீயே….
பல்லவி
அனைத்தும் நீயே அகிலாண்டேச்வரியே
எனைப்படைத்தவளே உனையே துதித்தேன்
அனுபல்லவி
வினைப்பயனால் கட்டுண்ட எனை விடுவிப்பாயே
வனமாலையணிந்த கேசவன் சோதரி
சரணம்
கன்றெனை அரவணைக்கும் பசுவும் நீயே
என்னுடைய பாடலுக்கு பொருளும் நீ இசையும் நீ
குன்றெனைத் தாங்கும் மலையும் நீயே
வென்று பகை முடித்து அரக்கரையழிப்பவள் நீ
மன்றாடும் மகவெனக்கு குன்றாத அன்பளிக்கும்
அன்னையும் நீ ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அணுவும் நீ அண்டமும் நீ கணுவுக்குள் கணுவும் நீ
இனிக்கும் கரும்பும் நீ அதனுள் சுவையும் நீ
விண்ணிலுள்ள நிலவும் நீ மண்ணுக்கு மழையும் நீ
பெண்ணில் பேரழகு நீ கண்ணில் கருமணியும் நீ
பண்ணும் பனுவலும் நீ பாடும் பொருளும் நீ
விண்ணும் மண்ணும் நீ விளக்கும் ஒளியும் நீ
என்னுள்ளம் புகுந்தென்னை ஆட்டுவிக்கும் பொருளும் நீ
முன்னைப் பழம் பொருள் நீ மூவருக்கு முதலும் நீ
அன்னை அபிரமியே சிவகாமியும் நீயே
உன்னைத் துதித்திடுமெனையாண்டருள்வாயே
No comments:
Post a Comment