Friday, 27 October 2023

புண்ணியனே…..

 தினம் ஒரு பாசுரம் -1:

உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெருமாயனே ! இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை அண்ணலே ! அமுதே ! அப்பனே ! என்னை ஆள்வானே

–திருவாய்மொழி

ஆழ்வார்களில் தலையாய நம்மாழ்வருக்கே, ஐம்புலன்கள் சார் சிற்றின்ப ஆசை சங்கடத்தை தருவதாய் அவரே அருளியிருக்கையில், பொருளாசையே பிரதானமாக இருக்கிற தற்காலச்சூழலில், நாமெல்லாம் எம்மாத்திரம்?! இது ஒரு அற்புதமான பாசுரம்…. திருவாய்மொழியை சாமவேத சாரமாக அவதானிப்பதற்கு இது போன்ற பல திவ்யப் பாசுரங்கள் அதில் அமைந்திருப்பதே காரணம் என்பர்…..

பொருள் உரை:

அதாவது, திருக்குருகைப்பிரான், “நினைக்க/உணர இயலா மிகப்பெரிய மாயங்களை நடத்துபவனே! வெளியில் எனக்குப் பகைவர் என்றில்லாதபடி, என்னுள்ளேயே ஐம்புலன்கள் எனும் பகைவரைப் படைத்து, என்னை நலியவைத்து, உன் தாமரைப் பொற்பாதங்களை யான் அணுகாதபடிச் செய்கிறாய்! தேவர்கள் போற்றும், உலகம் மூன்றுக்கும் அதிபதியான, என் அண்ணலே, அமுதம் போன்று இனிமையானவனே, என்னையாளும் அப்பனே (இது நியாயமா?)” என்று பரமனைக் கேட்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.


  புண்ணியனே…..


           பல்லவி


புண்ணியனே உனைப் போற்றியுன் பதமே பணிந்தேன்

திண்ணியமாயெனக்கருள வேண்டுமெனத் துதித்து

             அனுபல்லவி


நண்ணியதுன் பதமே எண்ணியதுன் நாமமே

கண்ணியதுன் புகழே மண்ணிலனைத்தும் நீயே


                   சரணம்


எண்ணங்களுக்கடங்காத தத்துவங்களுடை

யவனே

விண்ணவரும் மண்ணவரும் வியந்தேத்தும் திருமாலே

அண்ணலே அமுதே அப்பனே கேசவனே

என்னுளே உள்ள ஐம்புலனாலாட்டுவிக்கும்

No comments:

Post a Comment