Monday, 23 October 2023

சரஸெனும்…..

 

                                          சரஸெனும்…..


                                            பல்லவி

                       சரஸெனும் மனமாகிய பொய்கையில் வீற்றிருக்கும் 

                       சரஸ்வதி தேவியை கலைவாணியைத்துதித்தேன்

                                             துரிதம்

                       அரனயன் கேசவன் நரர் சுரர் நாரதர்

                        சுரபதி ரதிபதி அனைவரும் வணங்கிடும்

                                           அனுபல்லவி

                        கரந்தனில் அட்ச மாலையை ஏந்தி நிற்கும்

                        பரதேவியை மொழி வடிவானவளை

                                            சரணம்

                         தண்ணீரை நீக்கிப் பாலைப் பருகிடும்

                         அன்னம் போலவே அடியார்கள் விளங்கிடவும்

                         மண்ணிலவர் நற்பண்பு பல்கிப் பெருகவும்

                         இடா தேவியெனும் சாரதையை பாரதியை                         

      

*சகல செல்வத்தையும் நம்முடைய கல்வியின் மூலம் கிடைக்க அருள் செய்கிறாள் அன்னை  சரஸ்வதிதேவி *

‘சரஸ்’ என்றால் ‘பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள். கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணிமாலையை அட்ச மாலை எனப் போற்றுவர். தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாளாம் சரஸ்வதி.

சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை. இது, கல்வியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம்.

பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப்பட்டிருக்குமாம். இதை சாரதா த்வஜம் என்பர். இதில் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

சில நூல்கள், கலைவாணியின் வாகனமாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம்.

தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு.வேதங்கள் சரஸ்வதிதேவியை துதிகளின் வடிவாக `இடா’ என்றும், அறிவின் விளக்கமாக `பாரதி’ என்ற பெயரிலும், ஞான வடிவில் திகழும் அவளை `சரஸ்வதி’ என்றும் போற்றுகின்றன.

இடாதேவியா அவள் நம் வீடுகளில் வீற்றிருந்து மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கிறாள். பாரதி தேவி என்ற பெயரில் மக்களுக்கு கல்வி-கலை ஞானத்தை அருள்கிறாள். சரஸ்வதிதேவி வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் நம்முடைய கல்வியின் மூலம் கிடைக்க அருள் செய்கிறாள் அன்னை  சரஸ்வதிதேவி என்கின்றன ஞான நூல்கள்.

சில கோயில்களில் கலைவாணி கரத்தில் பூரணக் கலசத்துடன் திகழ்வாள். அவள் நதியின் வடிவிலும் அருள்பாலிப்பவள் ஆதலால், கரத்தில் பூரணக் கலசத்துடன் அவள் அருள்வதாக ஐதிகம்.

கலைவாணியை வாக்தேவியாகவும் போற்றுகின்றன புராணங்கள். வாக்தேவியானவள் மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திகழ்கிறாளாம்.

இந்த மூன்று திருவடிவுடன் திருவீழிமிழலை தலத்தில் அவள் ஈசனை வழிபட்டதாக, அவ்வூர் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள மூன்று லிங்கங்களை முறையே காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்..

*சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*

No comments:

Post a Comment