Sunday, 8 October 2023

தனிக்கோயில் நாச்சியாரை…..

 

  படித்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!



               தனிக்கோயில் நாச்சியாரை…..


                     பல்லவி

        தனிக்கோயில் நாச்சியாரை  மகாலக்ஷ்மியை

        எனக்கருள வேண்டுமென மனமாரத்துதித்தேன்

                      அனுபல்லவி

        இனியவன் கேசவன் திருமார்பிலுறைபவளை

        தனிப்பெருங்கருணையெனக்களிக்கும் தாயாரை

                          சரணம்  

        முனிவரும் தேவரும் கடவுளர் மற்றும்

       அனைவரும் வணங்கி கரம் பணிந்தேத்தும்

       தனிப்பெருந்தேவியை சமுத்திரகுமாரியை

       பனிதரும் திங்களின் உடன் பிறந்தவளை


       புனித ஆலயங்கள் பலவற்றிலெழுந்தருளி

       தனிப்பெருமையுடனே காட்சிதரும் திருமகளை

       இனியவளை திருவெள்ளறை லக்ஷ்மியை

       பனி நிறைந்த பத்திரியில் கோயில் கொண்டவளை 

  

       கனிவுடனருள் தரும் வஞ்சுளவல்லியை

       திருச்சானூருறை  அலமேலுமங்கையை

       பெருமை மிகு மும்பை மகாலக்ஷ்மியை

       கருணை பொழியும் பூரணவல்லியை 


       அருள்மிகு வசந்தநகர் அஷ்டலக்ஷ்மியை    

       திருவெள்ளறை வளர் பங்கயவல்லியை

       திருவில்லிபுத்தூருறை கோலமகா லக்ஷ்மியை

       திருக்கண்ணன்மங்கை அபிஷேகவல்லியை       


      திருத்துழாய் வி்ல்வம் தாமரை துளசி

      மஞ்சள் குங்குமமாரத்தி கோலம்

      பொருட்களனைத்திலுமுறைபவளை

      திருமகளை அலைமகளைத் திருவென்னும் பெயராளை

       

              

        

எல்லா வைணவ ஆலயங்களிலும் ஸ்ரீதேவி என்ற பெயராலும், அனேக இடங்களில் மகாலட்சுமி தனி கோயில் கொண்டு இருந்தாலும் சில முக்கியமான கோயில்கள், சென்னை அஷ்டலக்ஷ்மி கோயில், நாச்சியார் கோயில் வஞ்சுளவல்லி தாயார், திருவெள்ளறை லக்ஷ்மி, தரங்கம்பாடி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நின்ற கோல மகாலட்சுமி, கண்ணமங்கை தேன்கூடு அபிஷேகவல்லி தாயார், ஏதிருச்சானூர் அலமேலுமங்கை, மைசூர் தொட்டகட்டவல்லி மகாலட்சுமி, நூக்கிஹல்லி நடனமாடும் லக்ஷ்மி, மும்பை மகாலட்சுமி, உத்தமர் கோயில் பூரணவல்லி, பத்ரிநாத் மகாலட்சுமி போன்ற கோயில் போன்றவையாகும்.


வில்வம், நெல்லி, தாமரை, துளசி போன்ற தாவரங்களில் ஸ்ரீலட்சுமி வாசம் புரிகிறாள். மங்கள பொருட்கள் அனைத்தையுமே லக்ஷ்மீகரம் என்று வணங்குகிறோம். குறிப்பாக, அட்சதை, பூர்ணகும்பம், மஞ்சள், குங்குமம், ஆரத்தி, ஸ்ரீசூரணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, வெற்றிலை, யானை, ஸ்வஸ்திகா கண்ணாடி, தங்கம், காசு, அளக்கும் படி, எலுமிச்சை போன்றவை லக்ஷ்மி அம்சமானவையே 


வலம்புரி சங்கில் வாழ்பவள் சங்கலக்ஷ்மி, மாங்கல்யத்தில் உறைபவள் சௌபாக்கியலக்ஷ்மி, தீபத்தில் இருப்பவள் தீபலட்சுமி, வீரனின் தோளில் வாளில் திகழ்பவள் வீரலட்சுமி, வீட்டின் வாயிலில் பஞ்சலக்ஷ்மி, மகுடத்தில் மகுட லக்ஷ்மியாகவும், குபேரனுக்கு செல்வவளம் கொடுத்து, சங்கநிதி, பத்மநிதியாகவும் விளங்குபவள் மகாலட்சுமி.


வெள்ளிகிழமைகளில் தாமரை கோலமிட்டு, மலர்களால் திருமகளின் பல்வேறு நாமம் சொல்லி அர்ச்சிப்பவருக்கு எல்லா நலமும் அருளக்கூடியவள் திருமகள். தேனையும், பாலையும் நைவேத்தியமாக விரும்ப கூடியவள். உணவுகளில் அன்னலட்சுமி என விளங்கும் அன்னை தானம் அளிப்பவரிடம் விரும்பி தங்குகிறாள். தூய்மையான மனமும் உடலும் கொண்டவரிடம் லக்ஷ்மி மகிழ்வாக உறைகிறாள். பால்நிவேதனம் செய்து லக்ஷ்மிக்கு படைத்தது ஏழை குழந்தைகளுக்கு அளித்து வந்தால் குழந்தை பேறு கிட்டும்.


நாகபஞ்சமி அன்று நாகலக்ஷ்மியை வழிபடுவது நலம். பூத்துக்குலுங்கும் தோட்டங்களிலும், தாமரைக்குளத்திலும், சந்தன,பன்னீர் திரவியங்களிலும், உப்பு,இனிப்பிலும் இருப்பவள் லக்ஷ்மி. கோலமிட்டு முன்வாசலில் விளக்கேற்றிய வீட்டிலும், பின்வீட்டில் மாட்டு தொழுவத்திலும் கிரஹலஷ்மி வாழ்கிறாள்.


அன்பர்களின் இதயத்தில் பாக்யலக்ஷ்மியாகவும், கரங்களில் தான்யலக்ஷ்மியாகவும், புஜங்களில் வீரலக்ஷ்மியாகவும், இதயத்தில் சத்யலக்ஷ்மியாகவும், குணத்தில் கீர்த்திலக்ஷ்மியாகவும், உடலில் சௌம்யலக்ஷ்மியாகவும், கம்பீரத்தில் ராஜலக்ஷ்மியாகவும் விளங்குகிறாள் என மந்திரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment