பூமண்டலம் போற்றும்….
பல்லவி
பூமண்டலம் போற்றும் முழுமுதற் கடவுளை
தாமோதரனைக் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
ஆமருவியப்பனை கோகுலக் கண்ணனை
மகர குண்டலங்களணிந்த மாதவனை
சரணங்கள்
தாமரை நாபனை வெண்ணை திருடியை
கோமகள் அசோதையின் அன்புப் பிடியில்
தாமாக அகப்பட்ட வசுதேவன் மைந்தனை
மாமறைகள் கொண்டாடும் நந்தகுமாரனை
சிறு தடி கொண்டு அடிக்க வந்த அன்னையிடம்
குறும்புடன் பயந்தது போல் பாசாங்கு செய்து
கமலக் கரங்களால் போலிக் கண்ணீர் துடைத்து
கயிற்றால் வயிற்றில் கட்டுண்டு நின்றவனை
விநயமுடன் பக்தியால் மட்டுமே தன்னை
அடைந்திட முடியுமென விளங்கும் வண்ணம்
தனது பால்ய லீலைகளால் கோகுலத்து
மனிதரனைவரையும் பரவசிக்கச் செய்தவனை
பரமபத பதவியோ வைகுண்ட வாழ்வோ
சுரபதியின் லோகமோ எதுவும் வேண்டேன்
பரந்தாமனென் மனத்துள் எப்போதும்
அவன் செய்த லீலைகளைக்காணும்படிச் செய்யவே
No comments:
Post a Comment