65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.
ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!
அபிராமி (65)
பல்லவி
அபிராமவல்லியுன் மலர்த்தாள் பணிந்தேன்
காலசம்ஹார மூர்த்தியின் மனங்கவர்
அனுபல்லவி
சுபிட்சமும் நல்வாழ்வும் நல்கிடுமன்னையே
அபயமளித்தென்னை ஆண்டருள வேண்டினேன்
சரணம்
வானும் புவியும் அண்டமும் காண
மாறனை எரித்த மகாதேவனுக்கு
ஈராறு கரமும் இருமூன்று முகமுமுள்ள
வேலனைப் படைக்கும் சக்தியளித்தவளே
No comments:
Post a Comment