Sunday, 31 March 2024

மண்ணார்ந்த பிறப்பறுக்க….



                            மண்ணார்ந்த பிறப்பறுக்க….


                                             பல்லவி

                     மண்ணார்ந்த பிறப்பறுக்க உனையே பணிந்தேன்

                     பெண்ணொரு பாகத்தமர்ந்த மங்கை பங்கனே

                                          அனுபல்லவி

                      மண்ணையுண்ட வாயன் கேசவன் நேசனே

                      தண்மதி பிறை சூடிய தயாபரனே ஈசனே

                                            சரணம்

                      உண்ணார்ந்த ஆரமுதே உத்தரகோசமங்கையுறை

                      புண்ணியனே  புரமெரித்த மங்கள நாதனே

                      எண்ணியுனைத் துதிப்பதன்றி வேறொன்றறியேன்

                      கண்ணருள் தந்தெனைக் காத்திடுவாய் பராபரனே        


              

 பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு

உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன;
கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!
பண் ஆர்ந்த - இசை நிரம்பிய, மொழி - சொல்லையுடைய, மங்கை - உமையம்மையின், பங்கா - பாகனே, நின் ஆள் ஆனார்க்கு - உனக்கு அடிமையானார்க்கு, உண் ஆர்ந்த - உண்ணுதல் பொருந்திய, ஆர் அமுதே - அருமையான அமுதமே, உடையானே - உடையவனே, அடியேனை - அடியேனை, மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு - மண்ணுலகில் பொருந்திய பிறப்புகளை அறுத்து, ஆள்வாய் - ஆட்கொள்ளும் பொருட்டு, நீ வா என்ன அன்றே - நீ வருக அழைத்ததனால் அல்லவா, உன் கழல் - உன் திருவடிகளை, கண் ஆரக் கண்டு - கண் நிரம்பக் கண்டு, உய்ந்த ஆறு - அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது?

      

No comments:

Post a Comment