ஓவியம்: சகோதரி விஷ்ணுப்ரபா VishnuArts🙏
எங்கு சுற்றியும் ரங்கனைச் சேர்/சேவி என்பதொறு பழமொழி. அதையே பல்லவியாகக் கொண்டு அரங்கமாநகருளானுக்கு இன்று சாற்றிய பாமாலை 👇#ஸ்ரீரங்கநாதன்!
பல்லவி:
எங்கு சுற்றி வந்தாலும்
ரங்கனை நினை!
எம்பெருமான் துணையிருக்க
எதிர் வருமோ தீவினை!
அனுபல்லவி:
அங்கவன் அரங்கத்தில்
அழகாய்த் துயில் கொள்ளும்!
அத்புதத் திருக் காட்சி
காணவே மனம் துள்ளும்!
சரணம்:
சங்கு சக்கரம் இன்றிச் சயனத்தில் அவனிருப்பான்!
சாட்க்ஷாத்கரனாக அரங்கத்தில் கொலுவிருப்பான்!
சரணடைந்தார் வினையைச் சடுதியில் மாற்றி வைப்பான்!
நம் அந்தரங்கம் அனைத்தும்
அந்த ரங்கன் அறிவான்!
அறிந்தும் அறியான் போல்
அறிதுயில் தான் புரிவான்!
அரங்கத்தில் பயின்றாடும் ஈசனும் துதி நேசன்!
அயன் முதல் தேவாதி முனிவரும் பணி வியாசன்!
அலர்மேல் மங்கையவள்
பற்றிடும் அவன் பாதம்!
பற்றிடத்தான் நமக்குக்
கிட்டிடும் உயர் போதம்!
✍️சாஸ்தா ராஜகோபால்✍️ 03~03~2024
அங்கிங்கெனாதபடி……
பல்லவி
அங்கிங்கனாதபடி எங்கு சுற்றினாலும்
பங்கயநாபன் ரங்கனே என் துணை
அனுபல்லவி
சங்கரன் பங்கிலுறை சங்கரி சோதரன்
சங்கொடு சக்கரமேந்திய கேசவன்
சரணம்
திங்களும் ஞாயிறும் கண்களாய் விளங்கும்
செங்கண்மாலெனும் பெரிய பெருமாளவன்
பங்கயச்செல்வி திருவரங்க நாயகி
தங்கும் மணிமார்பன் மாதவன் மதுசூதனன்
எங்கும் நிறைந்திருக்கும் பச்சைவண்ண மாலவன்
செங்கமலக் கண்ணன் செம்பவள வாயன்
பொங்கரவணை துயிலும் ஶ்ரீமன் நாராயணன்
மங்காத புகழ் மேவும் அரங்கநகர் நாயகன்
No comments:
Post a Comment