சிங்காரவேலன்
இந்தப் பாடல் வந்ததன் பின்னே ஒரு கதையுண்டு. நானும் என் மனைவியும் வழக்கம் போல் ஒரு மாலைப் போது மயிலை கபாலி கோயில் சென்றோம். அங்கு கற்பகாம்பிகை
சந்நிதியில் அதிக கூட்டமில்லை. என் மனைவி கற்பகாம்பிகை மீது நானெழுதிய பாடலை மனமுருகி ப்பாடினாள். பின்பு அம்பாளை வணங்கி குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டோம்.
அங்கிருந்து நீங்கி கபாலியை வணங்கிவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். பின் நவக்கிரகங்களைச் சுற்றி விட்டு தனியே இருந்த சனீச்வரரையும் அருகே நர்த்தன கணபதியையும் வணங்கிவிட்டு சிங்கார வேலன் சன்னிதிக்கு வந்தோம். அந்த நாட்களில் நானும் என் மனைவியும்
நாள் பொழுதும் கோவில்களுக்குச் செல்வது அங்கிருக்கும் இறைவன் இறைவி மீது அவரருளாலே
பாடல் புனைந்து என் மனைவி இரவோடிரவாக மெட்டமைத்து மறுநாள் காலை அந்தந்தக்
கடவுளரின் முன் பாடி மகிழ்வோம். சுருதி லயமாகச் சென்றுகொண்டிருந்தது வாழ்க்கை.
அப்படியிருக்க நான் சிங்கார வேலன் சன்னிதியின் முன் நின்று என் மனையாளிடம் கர்வமாகச் சொன்னேன் . இதோ இந்த சிங்கார வேலனைப் போற்றி இப்பவே ஒரு பாடலியற்றித் தருகிறேன்
நீ இரவு மெட்டமைத்து நாளை வந்து பாடலாம் என்றேன். என் சாதாரணமான அனுபவம் அந்தந்த
தெய்வங்களின் முன் நின்று பிரார்த்திக்கும் போது சில வரிகள் வார்த்தைகள் மனதில் உதிக்கும்.
பின்னர் அவற்றை வைத்து பாடல் புனைவேன். இன்றும் அதே போல் சிங்கார வேலன் முன் நின்று
கரம் கூப்பி பிரார்த்தனை செய்தேன். ஒன்றுமே தோணவில்லை. மனைவியிடம் பாட்டெழுதிவிடுகிறேன் என்று சொன்னோமே என்ற யோசனையில் வள்ளி தெய்வானை சமேத
முருகனையும் சரியாக தரிசனம் செய்யவில்லை. சற்று நேரம் அருகே இருந்த மண்டபத்தில் அமர்ந்து யோசித்து யோசித்துப் பார்த்தேன். மனதில் பலர் பலவிதமாய் எழுதிய முருகன் பாடல்
வரிகளே வந்த வந்து போயின. பின் வீடு வந்து சேர்ந்தோம். இரவு முழுதும் எழுதி எழுதிப் பார்த்தால்
ஏற்கனவே பலரெழுதிய பாடல் வரிகளே வந்து போயின. முருகன் ஏளனமாய் சிரிப்பதாய் நினைத்தேன். என் முயற்சியில் முழுவதுமாய்த் தோற்றேன். என் மனைவியிடம் வருத்தத்தோடு சொன்னேன் நான் வரகவி இறையருள் உள்ளவன் என்று எனக்குள்ளே கர்வப் பட்டுக் கொண்டேன்.
முருகன் என் கர்வத்தை போக்கிவிட்டான். அவனருளும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.
சில நாட்களில் எங்களுக்கு திருச்சிராப்பள்ளி செல்ல சந்தர்ப்பம் அமைந்தது. அங்கு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் தரிசனம் அற்புதமாக அமைந்தது. கணபதிக்கு தோப்புக்கரணம் போட்டு விட்டுப் பிரார்த்தனை செய்தோம். மனைவியிடம் சொன்னேன் பிள்ளையாரிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டுகொண்டேன் என்று. கள்ளமில்லாமல் பிரார்தித்தால்
கணபதி அருள்வாரென்று அவளும் சொன்னாள். அங்கு கணபதி தயவால்..” என்னுள்ளம் புகுந்தென்னை ஆட்டுவிக்கும் ..” என்று தொடங்கி முழு பாடலும் எழுதினேன். என் மனைவி அங்கேயே மெட்டமைத்து ஹம்சத்வனி ராகத்தில் கணபதி முன் பாடினாள். பரவசமான அனுபவம்.
பிறகு பல தலங்கள் சென்று அரங்கன், சமயபுரம் மாரி,.....என்று பல கடவுளர்களை தரிசித்து பாடல்
பல புனைந்தேன். பல பல ஆச்சரியமான அனுபவங்கள் அது பற்றி இன்னொரு சமயம்.
சென்னை வந்ததும் நேரே மயிலை சிங்காரவேலன் சந்நதி சென்று அர்ச்சனை செய்து பிரார்த்தித்தோம். அன்று அந்த வேளை இயற்றியது தான் இந்த “ சிந்தை கவர்ந்திடும்...”
பாடல்.
No comments:
Post a Comment