Friday, 2 July 2021

இன்னருள்….,,


ஊடலில் கோபப்பட்டு கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருக்கும் உன்னை ஸ்ரீ நீலகண்டன் எதிரில்  நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி உன் நகக் கண்ணாடியில் தெளிவாகத் தெரிகிறது. தோழி, தலைவியிடம் தலைவன் உன்காலடியில் என்று விளையாட்டாகக் கூற பாதத்தைப் பார்த்து பின் கோபத்துடன் தோழியைப் பார்க்கும் காட்சி அவள் முகத்தில் ப்ரகாசிக்கிறதும் தனி அழகன்றோ ?என்று ஸ்ரீ துர்கையை வர்ணிக்கிறார் பட்டத்ரி.

இதுபோலவே,

ஸிவே ஸ்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா

ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ

ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ-ஸௌபாக்யஜநநீ

ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா

பொருள்: 

ஸ்ருங்காரம்,பீபத்ஸம்,

ரௌத்ரம்,அத்புதம்,

பயானகம்,வீரம்,

ஹாஸ்யம்,

கருணை என்கிற எட்டுவிதமான ரஸங்களும் தேவீயினுடைய த்ருஷ்டியில் நிறைந்திருக்கிறது...

அதாவது, சிவபிரானிடம் மட்டும் உன் பார்வை சிருங்கார ரஸத்தைப் பிரதிபலிப்பதாகவும், அவரைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதாகவும், கங்கா தேவியிடம் கோபமுடையதாகவும், சிவனின் திருவிளையாடல்களில் வியப்புடையதாகவும், சிவன் அணிந்துள்ள பாம்புகளிடம் பயமுடையதாகவும், தாமரை மலரை விடச் சிவந்தும், வீர ரஸம் ததும்புவதாகவும், தோழிகளிடம் இனிய நகைச்சுவை உடையதாகவும் என்னிடம் கருணை நிரம்பியதாகவும் விளங்குகிறது.என்று அம்பிகையை இந்த ஸ்லோஹத்தில் வர்ணித்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள்.


                                                இன்னருள்….,,


                                                             பல்லவி

                                            இன்னருள் தந்தெனையே  ஆண்டருள்வாயே

                                             சென்ன கேசவன் சோதரி நீயே

                                                           அனுபல்லவி

                                             உன்னிரு திருவடிக் கமல பதங்களே

                                             சென்னியில் வைத்து அனுதினம் துதித்தேன்      

                                                                 சரணம்                 

                                             பன்னக பூஷணன் ஊடலில் கோபமுற்று

                                             உன்னெதிரில் நிற்பதுன் நகங்களில் தெரிவதையுன்

                                             தோழியர்  உரைத்ததும் அவருடன் பிணங்கிய உன்

                                             அழகு முகம் கண்டு ஆனந்தம் கொண்டேன்                           


                                            சிவனிடம் காதலும் பிறரிடம் வெறுப்பும்

                                            அவன் திருவிளையாடல் தனில் வியப்பும்

                                            கங்கையிடம் கோபமும் அரவிடம் பயமும்

                                            கமல மலரெனச் சிவந்த ரௌத்திரமும்


                                            பழகும் தோழிகளிடம் நகைச்சுவையும்

                                            தொழுதிடும் பக்தரிடம் பெருகும் கருணையும்

                                            அழகுடன் காண்பித்தபயமளித்திடும்

                                            அன்னையே ஶ்ரீ லலிதே உன்னையே துதித்தேன்

No comments:

Post a Comment