Saturday, 3 July 2021

மாசிலா அன்னையே…….

ஹே தேவி சிவனாரின் கடாஷத்தால் தங்கள் வெட்கத்தால் உங்கள் தலையைக் குனிய வைக்கிற போது உங்கள் பார்வை பூமியில் படுகிறது. அப்பார்வை பூமியைப் பிரகாசிக்க செய்கிறது.உன் பாதத் தாமரைகளைக் கண்ட உனக்கே அவை உண்மையான தாமரைகளோ என்ற மயக்கத்தில் உன் கண்கள் விரிந்து ப்ரகாசிக்கின்றன. அவை புஷ்பங்களிடம் தேன் குடித்த பிறகு மயங்கிய. வண்டுகள் போல உள்ளன. தேவியின். கண்களை வண்டுகளாகவும் பாதங்களை தாமரைகளாகவும் கவி மிக அழகாக வர்ணிக்கிறார்.

பரதேவதையினுடைய இரண்டு கண்களும் விசாலமாக நீண்டு இருப்பினும்,கடைக்கண்ணால் பார்க்கும்போது இரண்டு காதுகளையும் தொட்டுக் கொண்டிருக்கின்றதுகளோ என்று தோன்றுகிறது.அம்பாளோ மஹாவித்வான்கள் தன்னுடைய தத்வத்தை ப்ரதிபாதனம் செய்ய  நிர்மாணம் செய்கிற காவ்யம் முதலான ஸ்தோத்ர ஸமூஹத்திலுள்ள ரஸத்தை எப்போதும  இரண்டு காதுகளாலும் பானம் செய்து கொண்டு வருகிறாள். தன் பக்தன் தன்னை ஸ்துதிக்கும காலத்தில்,அந்த ஸ்தோத்ரங்கள் புஷ்பக்கொத்துகள் போல் தோன்றுகிறபடியால்,

அதிலுள்ள நவரஸங்களாகிற மகரந்தத்தை கர்ணாம்ருதமாக இருக்கும் காரணத்தால் விடாமல் இரண்டு காதுகளையும் கொடுத்து பக்தர்களுடைய ஸ்தோத்ரங்களை கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.இவ்விதம் தேவீயினுடைய  காதுவழியாகச் செல்லும் கவிகளுடைய காவ்ய ரஸனையாகிய புஷ்பக் கொத்துகளில் உள்ள தேனை அம்பாளுடைய கடாஷ வீட்ஷனமாகிய 

குட்டி வண்டுகள் இரண்டு பக்கத்திலும்  தானும் குடிக்க இருந்துவருகிறது.உத்தம ஸ்த்ரீகளுடைய கடாஷங்களோ,காதுவரையிலும் விசாலமாக இருந்துவரும் தேவீயினுடைய விஷயத்தில்  இம்மஹிமையை வர்ணிக்கமுடியாது.கடைக்கண் இயற்கையிலேயே கருப்பாகவே தோன்றும்.அது கருப்பான வண்டுகளின் குட்டிகள் போலும் தோன்றுகின்றன.வண்டுகளுக்கோ ரஸங்களை ஆஸ்வாதனம் செய்வதில் ரொம்பவும் உத்ஹாஸமுண்டு. தேவீயினுடைய காதுகள்  மூலம் உள் செல்லும் கவிகளுடைய காவ்யரஸத்தையோ தேவீயினுடைய கண்களாகிய குட்டி வண்டுகள் விடாது பானம் செய்கிறதுதேவீக்கோ மூன்று நேத்ரங்கள் என்று முன் சொல்லப்பட்டது.அதில் இரண்டு நேத்ரங்களுக்குத்தான் தேவீயின் காதில் சம்மந்தப்பட்டு முன் சொன்ன பாக்யம் கிடைக்கின்றது.நெற்றிக்கண்ணுக்கோ காலைத்தொட பாக்யமில்லாததினால் மற்ற இரண்டுகண்களையும் பார்த்து அஸூயை  கொண்டு கோபத்தால் சிவப்பாக ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது.நெற்றிக்கண் அக்னி ஸ்வருபமானதினால் இயற்கையிலேயே சிவப்பானது.அது  சந்த்ர ஸூர்யர்களான இரண்டு கண்களுக்குமுள்ள பாக்யம்,தனக்கில்லை என்ற அஸூயையினால்தான் சிவந்திருக்கிறதென்றும் கவி உத்ப்ரேஷிக்கின்றார்.


                                                               மாசிலா அன்னையே…….


                                                                         பல்லவி

                                                         மாசிலா அன்னையே ஶ்ரீ லலிதாம்பிகையே

                                                         தேசுடைய உந்தன் மலரடி பணிந்தேன்

                                                                        அனுபல்லவி

                                                          காசினி போற்றும் கேசவன் சோதரி

                                                          ஆசா பாசத் தளைகளைக் களைபவளே  

                                                                             சரணம்

                                                          ஈசன் பார்வை பட்டு வெட்கிக் குனிந்த

                                                          ஈச்வரியுன் பாதம் கமலமென நீ நினைந்து

                                                          ஆசையுடன் விரிந்த உன் கண்கள் வண்டாகி   

                                                          வாசமுள்ள அம்மலரில் தேன் பருக நினைத்ததுவோ


                                                          நேசமுடனடியார்கள் போற்றும் புகழுரைகள்

                                                          வாசமுள்ள மலர்க் கொத்தாய் உன் செவியில் விழுந்திட

                                                          ஆசையுடனவைகளையுன் கடைக்கண் வண்டுகள்

                                                          தேனெனப் பருகிட விழைந்ததுவோ வியந்தார்கள்

                                        

                                                          திங்களும் ஞாயிறுமாய்த் திகழுமுன் கண் பார்த்து

                                                          கங்குகளேந்திய மூன்றாம் கண் அசூயைப் பட்டு                                                           

                                                          செங்குருதி போல் சிவந்து காட்சியளித்ததுவோ வென

                                                          பங்கயச் செல்வியே அதிசயித்தாரடியார்கள்.                                               

                                                             


                                                          

                                                           

                                                          

                                                         

                                                          

No comments:

Post a Comment