தூலவுட லரவினது தோலென்ன நீங்கவே சூக்குமத் தோடு யிரினைத்
துன்பமுறு யாதனா வுடலத் திருத்தியே சுடருமெரி வாயி லிடுவார்
மேலதிற் கனலெனச் செம்பினை யுருக்கியே விடுவர்விழி தன்னி லூசி
விம்முற விறக்குவார் நரகுதொறும் வெவ்வேறு விதமாக வூழி யூழி
காலம தழுத்துவார் தலையெழும் பிடிலுச்சி கவிழுற வடிப்ப ரந்தக்
கனலொத்த யமதூதர் கையிலடி யேன்றனைக் காட்டிக் கொடுத்தி டாதே
ஆலமமு துண்டரமரர் தமையாண்ட நீள்கருணை யன்னமே யுமைநம் பினேன்
அருண்ஞான வாரியே யாசைமே வியசெல்வ வகிலாண்ட மெனுமரசே..!!!
பொருள் :
தாயே லோகமாதா..!!!
பாம்பானது தன் உடலை விட்டு எப்படி அதன் தோலை நீக்குகிறதோ அதுபோல தூலமான எம் உடலை விட்டு சூட்சும உயிரை பிரித்து..!!! இதுவரை அடியேன் செய்த பாவச்செயல்களுக்கு தண்டனை கொடுக்கும் வண்ணம் ஒரு பிரத்யேகமான உடலில் அந்த உயிரைச் செலுத்தி..!!! அதனை எரிவாயில் வைத்து அந்த உடலின்மேல் கொதிக்கவைத்த செம்புக் கலவையை ஊற்றுவார்..!!! எம்முடைய கண்களில் ஊசியை வைத்து துடிதுடிக்க குத்தி காயப்படுத்துவார்..!!! கால்களை அடித்து கீழே விழும்படி செய்து அதையும் மீறி தலையை தூக்கினால் உச்சந்தலையில் எழாதபடி அடித்து துன்புறுத்துவார் அந்த எமதூதர்கள்..!!! அப்படி பட்ட எமதூதர்களின் கையில் அடியேனை சேர்த்து அடியேன் துன்புறும்படி செய்துவிடாதீர்கள்..!!! பாற்கடலை கடைந்து அதிலிருந்து பெற்ற அமுதத்தை உண்ட அமரர் கூட்டங்களை அதீதகருணையுடன் ஆளும் பராபரையே அன்னம் போன்ற மென்மையான நடையுடையவளே..!!!! தங்களையே ஸ்திரமாய் நம்பினேன் அம்மா..!!! தங்களது பாதமலரே கதியென இருக்கின்றேன் தாயே..!!! ஸ்ரீ மத் அகிலாண்டேஷ்வரியே..!!! ஞானக்கடலாய் விளங்குபவர்களே...!!! எம்முடைய பிறவியை புனிதமாக்க வந்த மாதரசியே..!!! தங்களுக்கே சரணம் தாயே .
ஆனைக்காவிலுறை…..
பல்லவி
ஆனைக்காவிலுறை அகிலாண்டேச்வரியே
அன்னையே உனைத் துதித்தேன் கேசவன் சோதரி
அனுபல்லவி
ஊனைப் பிரித்தென் உயிரைக் கொண்டு செல்லும்
சேனையிடமென்னை காட்டிக் கொடுக்காதிருக்க
சரணம்
அரவுரிக்கும் தோலைப் போலென்னுடலை உரித்து
பிரிதொரு உடல் பொருத்தியென் வினையாலதனை
எரிவாயில் வைத்துத் துன்புறுத்தாவண்ணமும்
சிறிய ஊசியையென் கண்ணில் செலுத்தாமலும்
மேலும் பலப்பலத் துன்பங்கள் செய்யாதபடி
காலனிடமிருந்து எனைக் காத்தருள்வாயே
அமரருக்கமுதளித்த அன்னநடையாளே
அருள் ஞானக்கடலே பதமலர் பணிந்தேன்
No comments:
Post a Comment