எங்கும் எப்போதும்…….
பல்லவி
எங்கும் எப்போதும் எவ்விடத்துமுள்ளவனை
சங்கரனை ஈசனைக் கேசவனை துதித்தேன்
அனுபல்லவி
பொங்கரவணிந்த சிவபெருமானையும்
பங்கயநாபன் நாராயணனையும்
சரணம்
மங்கிய கச்சையில் உள்ள அவலையும்
தன் சேலைப்பிடியிழந்த திரௌபதியின் நிலையையும்
தன் மனத்தில் பூசலார் கட்டிய கோயிலையும்
தனைக்காக்க துரியன் மறைந்ததையும் கண்டவனை
கடவுளின் பார்வை எது வரை பாயும் ?
இடுப்பில் கிழிந்த துணியில் அவலைக் கட்டி கொண்டு சென்ற குசேலர் தாம் கொண்டு வந்த அவலைப் பற்றி கிருஷ்ணரிடம் சொல்லவில்லை. ஆனால், பகவான் பரமாத்மா அதைப் பார்த்துவிட்டார்.
துரியோதனன் அவையில் அவமானத்துக்காளான திரௌபதி தவித்தாள்; கதறினாள். அங்கிருந்த மாமனிதர்கள் புஜபல பராக்கிரம வீரர்கள் பார்த்தனர். ஏதும் செய்யாது இருந்தார்கள். ஆனால் அங்கிருந்து வெகு தொலைவில் (துவாரகையில்) இருந்த பரமாத்மா, தன் அருள்கடாக்ஷத்தால் அங்கு திரௌபதியை நோக்கினான்.
கல்லெடுத்து மண்ணெடுத்து பரமனுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டார் திருநின்றவூரை சேர்ந்த பூசலார்; கையில் பொருள் இல்லை ; தவித்தார் ; பொருள் தேடி அலைந்தார். கிட்டவில்லை . கடைசியில் தனக்குத் தானே ஒரு வழி கண்டுபிடித்தார். ‘நிலத்தை செப்பனிட்டு நெடுங்கோயில் கட்டுவதை விட மனத்தை செப்பனிட்டு மனக்கோயில் கட்டலாம்’என்று தீர்மானித்தார். அவ்வாறே மனத்தினுள் ஆலயம் எழுப்பினார்.
இது யாருக்கும் தெரியாது. மனிதர்கள் இதை யாரும் பார்க்க வில்லை. ஆயின் மகேசன் பார்த்து விட்டார். பார்த்தது மட்டுமல்ல இது குறித்து பல்லவ வேந்தனிடம் சென்று சொல்லியும் விட்டார். அதனால்தான் பல்லவ வேந்தன் தேடி வந்த போது, பூசலார் உள்ளத்தில் கட்டிய கோயில் பற்றி வெளி உலகம் அறிந்தது.
(குசேலரின்) இடுப்பு வரை பாய்ந்த தெய்வ கடாக்ஷம் (திரௌபதியின்) இருப்பு வரை பாய்ந்தது. அதே கடாக்ஷம், பூசலார் இதயம் வரையும் பாய்ந்தது. இதயத்திற்குள்ளும் பாய்ந்தது.
நன்மைகளை நிகழ்த்தும்போது நம்மை ரக்ஷிக்கும் இறைவனின் பார்வை தீமை செய்தால் என்ன செய்யும்?
குருஷேத்திரத்தில் யுத்தம் முடியும் தருவாயில் துரியோதனன் தன்னை மறைத்துக் கொள்ள நினைத்து மடுவிற்குள் சென்று மறைந்து கொண்டான். கிருஷ்ணன் பார்க்காமல் விடுவானா?
அப்படியானால் …
கடவுள் காண்கிறார் ; எல்லாவற்றையும் காண்கிறார்;
எங்கெங்கும் காண்கிறார் ; எப்போதும் காண்கிறார்.
No comments:
Post a Comment