நாதவடிவானவனே…….
பல்லவி
நாதவடிவானவனே நமச்சிவாயனே
கீதமிசைத்துன் பாதம் பணிந்தேன்
துரிதம்
நரர் சுரரிந்திரன் சுகசனகாதியர்
அரியயன் கடவுளரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
ஓதக்கடலுறங்கும் கேசவன் நேசனே
சீதக்கிரணம் தரும் சந்திரசூடனே
சரணம்
மாதவம் செய்திடும் முனிவரும் யோகியரும்
பூதகணங்களும் நந்தியும் நான்முகனும்
ஆதவன் முதலான கோள்கள் ஒன்பதும்
பூதலத்தோரனைவரும் துதித்திடும்
ஆதிமுதல்வனே அனைத்தும் நீயே
வேதியரோதும் வேதப்பொருளே
சோதியே சுடரே ஏதமிலாக் கடவுளே
பாதி உமைக்கீந்த பரமதயாகரனே
மேதினியோர் கொண்டாடும் மெய்ப்பொருள் நீயே
சாதித்த புண்ணியர் துதித்திடும் தெய்வமே
காதில் குழையணிந்த தோடுடையசெவியனே
பாதிமதியணிந்த பரமேச்வரனே
No comments:
Post a Comment