“சரணாலயம்”
‘ அத்தியாயம்மூன்று’
Episode 1: ‘காவேரி ப்பாட்டி’
நாம் இவரை சரணாலயத்தில் பார்க்கும் போது இவருக்கு அகவை தொன்னூற்றி ஏழு. பழுத்த பழம். இவர் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தோமானால் மனம் நெகிழ்கிறது. சின்னஞ்சிறு வயதிலேயே திருமணம். சில வருடங்கள் கூட வாழவில்லை, கணவர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.ஆனால் ஒரு பிள்ளைச்சுமையைக் கையில் கொடுத்து விட்டுத்தான் இறந்தார். ஆக அவள் வாழ்க்கைக்கு அது ஏதோ ஒரு வகையில் அர்த்தமளிப்பதாகத்தோன்றியது. அதிகம் படிக்காததால் நல்ல வேலைக்கு எங்கும் செல்ல இயலாத நிலை. அங்கிங்கு அலைந்து திரிந்து பலதரப்பட்ட இன்னல்களை அனுபவித்த பின், ஏதோ இறையருளால் ஒரு தனவந்தர் வீட்டில் சமையல் செய்யும் வேலை கிடைத்தது. கிடைத்த சொல்ப வருமானத்தில் மானத்தோடு வாழ்ந்து பிள்ளையைப் பள்ளியில் சேர்த்து நன்றாகப் படிக்க வைத்தாள். பிள்ளையும் குறை சொல்ல முடியாத அளவு நன்கு படித்தான். மிகவும் சிரம ப்பட்டு அவனை கல்லூரி வரை படிக்க வைத்த்து விட்டாள். இடையிடையே பணி செய்யும் வீடுகளில் ஏற்பட்ட சங்கடங்களை, கஷ்ட நஷ்டங்களை சமாளித்து, வேலைகள் மாற்றி எப்படியோ வாழ்க்கையை ஓட்டிப் பிள்ளையைப் படிக்க வைத்து விட்டாள். பிள்ளையும் சுமாராகப் படித்து கல்லூரிப் படிப்பையும் முடித்து விட்டான். அங்கே இங்கே தேடி பலர் கை கால்களில் விழுந்து காவேரிப் பாட்டி தன் சாமர்த்தியத்தில் பிள்ளைக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டாள். பிள்ளையும் தாயிடம் அன்புடனும் பாசத்துடனுமிருந்து, தனக்கு வேலை கிடைத்ததுமே காவேரியை வேலைக்குப் போகவேண்டாமென அன்புக் கட்டளையிட்டான். அதற்குள் காவேரிக்கு வயதேறி உடலுபாதைகள் தொடங்கி விட்டன. எனினும் மகன் இனி பார்த்துப்பான் என்றெண்ணி மகிழ்ந்தாள். அங்கே இங்கே சொல்லி மகனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்து மணமுடிக்க எண்ணி பிரயத்தனம் பண்ண ஆரம்பித்தாள். வாழ்க்கை ஓரளவு சுமுகமாக அமைந்து விட்டதென எண்ணி காவேரி பெருமூச்செறிந்தாள். இங்கு விதி வேறு விதமாக
அவள் வாழ்க்கையை திசை திருப்ப ஆரம்பித்தது. அவள் மகன் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாகவும், மண முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தான். காவேரியும், அந்தப் பெண் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் வளர்ந்து, பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையிலிருப்பதையும் கண்டு, மகன் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தாள். மணமான சில காலங்கள் எல்லாம் சுமுகமாகவும் நல்ல விதமாகவுமே நடந்தேறியது. ஆனால் மருமகள் ஆடம்பர வாழ்வை விரும்புவதையும் அவர்கள் வருமானத்துக்கு மீறி செலவு செய்வதையும் மகனிடம் பிரஸ்தாபித்தாள். மகன் புதுப் பெண்டாட்டி மோகத்தில் இருந்ததால் அவள் பேச்சு அவன் காதில் ஏறவில்லை. இது கண்ட மருமகள் காவேரி மீது வெறுப்பும் அவமரியாதையும் காட்டத்துவங்கினாள். சுயமாக கௌரவத்துடன் வாழ்ந்த காவேரிக்கு இது பொறுக்கவில்லை. மகனும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் விட்டேத்தியாக நடந்தான். இந்த மனவேற்றுமைகள், விகாரங்கள் வளர்ந்து கொண்டே வந்ததேயன்றிக் குறைவதாகத் தெரியவில்லை. காவேரிக்கு வயதும் ஏறிவிட்டது. மகன் தயவிலேயே வழ்ந்தது தவறோ என்று தோன்றத் தொடங்கிற்று. தானுழைத்து சேமித்ததெல்லாம் மகனின் கல்யாணத்துக்கென செலவு செய்ததால் கையில் ஏதும் பெரிதாக சேமிப்பும் இல்லை. மகன் நல்லபடியாக் பார்த்துப்பானென்று அவளும் ஏதும் கவலையின்றி இருந்து விட்டாள். இப்போது மருமகள், மகன் நடத்தையால் மன வேதனை அடைந்தாள். அதனால் ஒரு நாள் மகனிடம் தான் மீண்டும், பட்சணம்,அப்பளம், செய்யும் வேலைக்கு செல்லலாமா என்று யோசிப்பதகச் சொன்னாள். மகன் தன் சுய கௌரவம் பாதிக்கும் என்ற எண்ணத்தில், “எல்லாம் போட்டதை தின்று விட்டு வீட்டிலேயே இரு” என்று கடுமையாக் கூறிவிட்டுச் சென்றுவிட்டான். மருமகளின் கடுஞ்சொற்கள், உதாசீனம் எல்லாம் வேறு காவேரிக்கு வேதனை அளித்தது. அதனால் ஒரு நாள் இருவரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டாள்.அங்கே இங்கே அப்பளம் தயாரிப்பது, பட்சணம் செய்வது என வேலைகள் செய்து காலத்தைக்கழித்தாள். பின்னர் அது கூட முடியாமல் போக ஒரு கோவிலில் கூட்டிப் பெருக்கும் பணி செய்து வயிற்றைக் கழுவி வந்தாள். அவளை நான் தான் இந்த சரணாலயம் முதியோரில்லத்தில் சேர்த்தேன். சரணாலயத்தில் மூன்று வகைப் பிரிவுகள். ஒன்று காவேரிப் பாட்டி மாதிரி ஆதரவற்ற முதியோர்களைப் பராமரிக்கும் பகுதி. இன்னொன்று வசதியுள்ள முதியவர்கள், தனியாகவோ,தம்பதியாகவோ, தங்கும் வசதியுள்ள பகுதி. மூன்றாவது நோய் முற்றி இறப்புக்கு காத்திருப்போரை பராமரிக்கும் பகுதி ( palliative care). மூன்று பகுதிகளையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர், தெய்வானை முத்துக்கருப்பன், தம்பதியர். யாருமில்லாமி்ல்லாமல் சிவன் கோவிலில் பெருக்கி கோலம் போட்டு வாழ்க்கையை நடத்தி வந்த காவேரிப் பாட்டியை நான் தான் சரணாலயத்தில் சேர்த்து விட்டேன். அங்கு சேர்த்து விட்ட கடைசி காலங்களில் தான் அவர் கொஞ்சம் நிம்மதியுடன் அவர்களின் அரவணைப்பில் வாழ்க்கையை கடத்திக்கொண்டிருந்தார். இதோ இந்த வருடம் நூற்றி ஒன்றாம் வயதில் இறைவன் திருவடியை அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவே இன்று சரணாலயம் வந்திருக்கிறேன். (தொடரும்)