அசோத்ய மசலோத்பவம் ஹ்ருதய நந்தனம் தேஹிநாம்
அநர்கமதிகாஞ்சி தத்கிமபி ரத்ந முத்யோததே ।
அநேன ஸமலம்க்ருதா ஜயதி சங்கராங்க ஸ்தலீ
கதாஸ்ய மம மானஸம் வ்ரஜதி பேடிகா விப்ரமம் ॥ 89॥
தூய்மை செய்ய அவசியமில்லாத, பர்வத மலையில் உண்டான, அனைத்து உயிர்களின் உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய, விலை மதிப்பில்லாத ஒரு இரத்தினம் காஞ்சியில் விளங்குகிறது. இந்த இரத்தினத்தால் பரமேஸ்வரனின் திருமேனியே அலங்கரிக்கப்பட்டதாக விளங்குகிறது. அப்படிப்பட்ட இந்த இரத்தினத்திற்குப் பெட்டியாக ஆகின்ற நிலைமையை எப்பொழுது என் மனம் அடையப் போகிறதோ?
காமாக்ஷி என்ற இரத்தினம் காஞ்சியில் விளங்குகிறது. அது மலையில் உண்டானது; அதை சுத்தம் செய்யவோ, பட்டை தீட்டவோ தேவையில்லை; ஏனெனில், இந்த இரத்தினம் பரமசிவனின் மேனியையே இடப்பாகமாக அலங்கரித்து அழகுடன் விளங்குகிறது; விலை மதிக்க முடியாத இந்த ரத்தினம் அனைத்து உயிர்களையும் ஆனந்தப் படுத்துகிறது; அப்படிப்பட்ட விலையுயர்ந்த இரத்தினத்தைப் பாதுகாத்து வைக்க மிகவும் பத்திரமான - எண்ணங்களாலும் அமைப்பினாலும், எவராலும் திருட முடியாததாகவும் இருக்கும் - பெட்டியாக என் மனம் எப்பொழுது ஆகும் என்று கேட்கிறார் மூக கவி.
எப்பொழுதும் காமாக்ஷி காமாக்ஷி என்று ஸ்ரீ காமாக்ஷி சிந்தனையாகவே இருக்க வேண்டும் என்று அவளையே வேண்டுகிறார் மூககவி.
காமாக்ஷி…..
பல்லவி
காமாக்ஷி மலைமகளே கருணைமிகு ரத்தினமே
பூமியில் புகழ் விளங்கும் காஞ்சி நகர் ரத்தினமே
அனுபல்லவி
காமனின் வைரி காமேச்வரனின்
வாம பாகம்தனில் இடங்கொண்ட ரத்தினமே
சரணம்
நாம மாயிரம் கொண்ட அழகு நவரத்தினமே
நாமகள் பூமகளாய்க் காட்சி தரும் ரத்தினமே
தாமரை நாபன் கேசவன் சோதரியாய்
பூமண்டலம் புகழும் மரகத ரத்தினமே
சாம முதல் வேதங்கள் போற்றும் வைடூரியமே
மாமேரு தனிலமர்ந்த மாணிக்க ரத்தினமே
பாமரர் பண்டிதர் போற்றும் நீலரத்தினமே
கோமேதகம் பவளம் முத்து மணி ரத்தினமே
துரிதம்
தேமதுரத் தமிழால் பாமாலை பாடியே
தாமரையாம் என்னிதயப் பெட்டியிலே பூட்டினேன்
No comments:
Post a Comment