ஐயப்ப சுவாமிக்கு ஏராளமான திருநாமங்கள் உண்டு. அவற்றில், முதலாம் படிக்கு குளத்தூர் பாலன் என்று பெயர். இரண்டாம்படிக்கு ஆரியங்காவு அனந்தரூபன் என்று திருநாமம் சூட்டியிருப்பதாகத் தெரிவிக்கிறது புராணம். மூன்றாம்படிக்கு எரிமேலி ஏழைப்பங்காளன் என்றும், நான்காம் படிக்கு ஐந்துமலை தேவன், ஐந்தாம் திருப்படிக்கு ஐங்கரன் சகோதரன், ஆறாம் திருப்படிக்கு கலியுக வரதன், ஏழாம் திருப்படிக்கு கருணாகர தேவன் என்றெல்லாம் திருநாமங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. எட்டாம் திருப்படிக்கு சத்ய பரிபாலகன், ஒன்பதாம் திருப்படிக்கு சற்குண சீலன், பத்தாம் திருப்படிக்கு சபரிமலை வாசன், பதினொன்றாம் திருப்படிக்கு வீரமணிகண்டன், பனிரெண்டாம் திருப்படிக்கு விண்ணவர் தேவன் என்றும் திருநாமங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. பதிமூன்றாம் திருப்படிக்கு மோகினி பாலன், பதினான்காம் திருப்படிக்கு சாந்த ஸ்வரூபன், பதினைந்தாம் திருப்படிக்கு சற்குணநாதன், பதினாறாம் திருப்படிக்கு நற்குணக் கொழுந்தன், பதினேழாம் திருப்படிக்கு உள்ளத்து அமர்வோன் என்றும் பதினெட்டாம் திருப்படிக்கு ஐயப்ப சுவாமிஎன்றும் திருநாமங்கள் சொல்லி அழைக்கப்படுகின்றன.
பதிகளில்…..
பல்லவி
பதிகளில் சிறந்த சபரிமலை வாழும்
அதிசயக் கலியுக க்கடவுளைப் பணிந்தேன்
அனுபல்லவி
மதியணிந்த சிவனும் மாலன் கேசவனும்
சதிபதியாயிணைந்து உலகுக்களித்தவனை
சரணங்கள்
ஒண்ணாம் படியமர்ந்த குளத்தூர் பாலனை
இரண்டாம் படிதந்த ஆரியங்காவனந்தனை
மூன்றாம் படி மேவும் எரிமேலிப் பங்காளனை
நான்காம் படித் தலைவன் ஐந்துமலைத் தேவனை
ஐந்தாம்படிக்குரிய ஐங்கரன் சோதரனை
ஆறாம் படியிலுறை கலியுக வரதனை
ஏழாம் படி நின்ற கருணாகர தேவனை
எட்டாம்படி சத்ய பரிபாலகனை
ஒன்பதாம் படி நிற்கும் சற்குணசீலனை
பத்தாம் படி நாதன் சபரிமலைவாசனை
பதினொன்றாம் படி வீரமணிகண்டனை
பன்னிரெண்டாம்படி விண்ணவர் தேவனை
பதிமூன்றாம் படி மோகினி பாலனை
பதிநான்காம் படி சாந்த ஸ்வரூபனை
பதினைந்தாம் படி சற்குண நாதனை
பதினாறாம்படி நற்குணக் கொழுந்தனை
பதினேழாம் படி உள்ளத்தமர்வோனை
பதினெட்டாம் படியமர்ந்த ஐயப்ப ஸ்வாமியை
கதியவன் பதமே சதமென நினைந்து
துதித்துப் போற்றி திருவடி பணிந்தேன்
No comments:
Post a Comment