சகலமும் நீயே….
பல்லவி
சகலமும் நீயே சாம்பசிவா
அகிலம் காக்கும் சதாசிவா
அனுபல்லவி
முகமைந்துடைய அழகு சிவா
மகாதேவனே சிவலிங்க சிவா
சரணம்
இகபர சுகம் தரும் ஈசனே சிவா
மகாகணபதியை படைத்த சிவா
குகனெனும் முருகனை அளித்த சிவா
சுகம் தரும் கேசவன் நேசனே சிவா
அகிலாண்டேச்வரி நாயகனே சிவா
சுக சனகாதியர் வணங்கும் சிவா
மகபதி தேவர்கள் பணியும் சிவா
சகம் புகழும் புண்ணிய மூர்த்தி சிவா
சுகபாணி போற்றும் ஈசனே சிவா
பகைவரும் பணிந்திடும் பரமசிவா
ககனமும் புவனமும் போற்றும் சிவா
அகணித குணகண அமுத சிவா
தகனம் திரிபுரம் செய்த சிவா
மகனிடம் மறைபொருள் பயின்ற சிவா
சுகந்தரும் காமனை எரித்த சிவா
அகந்தையை அழித்திடும் ஆதி சிவா
சுகந்த குங்கும மணிந்த சிவா
பகலவனொருகோடி ஒளிதரும் சிவா
இகழ்ந்த தட்சணையழித்தசிவா
உகந்தென் பவப்பிணித் தீர்ப்பாய் சிவா
பகீரதியைச் சூடிய சிவா
மகேசனெனும் பெயர் கொண்ட சிவா
முகத்தில் பிறையணிந்த தேவனே சிவா
அகம் குளிர அனைவரும் வணங்கும் சிவா
மகிடனை மாய்த்த சக்தி சிவா
மகாதேவியும் நீயே சிவா
சகலரும் வணங்கிடும் ஈசனே சிவா
புகலிடம் நீயெனப் பணிந்தேன் சிவா
No comments:
Post a Comment