கலாவதி கலாப்ருதோ முகுடஸீம்னி லீலாவதி ஸ்ப்ருஹாவதி
மஹேஶ்வரே புவன மோஹனே பாஸ்வதி ।
ப்ரபாவதி ரமே ஸதா
மஹிதரூப ஶோபாவதி
த்வராவதி பரே ஸதாம்குருக்ருபாம்புதாராவதி॥ 95
சந்திரப் பிறையை தன் தலையில் தரித்து விளையாடுபவளும், மகேசனிடம் மிகுந்த ஆசையுள்ளவளும், உலகை மயக்குகிறவளும், சூரியனின் ஒளியும் சக்தியும் கொண்டவளும், எப்போதும் புகழொளி படைத்தவளும், பரம்பொருளுடன் இணைவதில் வேகமுள்ளமுள்ளவளும், நல்லோர்களுக்கு கருணை மழை பொழிபவளுமான கலைகளின் அரசியிடத்தில் எப்போதும் நான் இன்புறுகிறேன். சமஸ்கிருதத்தில் கலா என்னும் சொல்லுக்கு இனிய ஓசை என்ற பொருள் உண்டு. தேவியின் சொல்லினிமையை சொல்ல இயலாது; ஏற்கனவே தேவியின் "சபாஷ்" என்னும் புகழ்ச்சிச் சொல்லின் இனிமை கேட்ட ஸரஸ்வதி தன் வீணையை மூடிய கதை உங்களுக்கு தெரிந்ததே. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் தேவி " கலாவதீ " ஆய கலைகள் அறுபத்திநான்கின் அதிபதி என்று புகழப்படுகிறாள்.அறுபத்து நான்கு கலைகளையும் தன்னிடத்தே கொண்டி ருக்கிறாள் அம்பிகை என்றொரு அர்த்தம் கொள்ளலாம். அதோடு கலா என்றால் தோகை மயிலையும் குறிக்கும். அபிராமியந்தாதியிலும் பட்டர் "மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள், பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே!" என்னும் பாடலில் "சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! " எனப் புகழ்கிறார்.
அலகிலா…..
பல்லவி
அலகிலா விளையாடல் பல புரியுமன்னையே
தலங்களுள் சிறந்த காஞ்சியிலுறைபவளே
அனுபல்லவி
மலையரசன் மகளே கேசவன் சோதரியே
பகலவனொளியை மிஞ்சும் புகழொளி படைத்தவளே
சரணம்
நிலவின் கலையணிந்த சகல கலாவல்லி
உலகை வசப்படுத்தும் சிவகாமேச்வரி
கலைளின் அரசியே கருணை மழை பொழிபவளே
நலந்தரும் பரம்பொருளே அடைந்தேன் உன் பதம்
No comments:
Post a Comment