பன்னிரு திருநாமப்பெருமை
பல்லவி
திருமாலே உனதிரு திருவடி பணிந்தேன்
பரிந்தருள் புரிந்தெனை ஆண்டருள்வாய்
அனுபல்லவி
குருகூர் சடகோபன் திருவருளாலுன்
திருநாமம் பன்னிரண்டின் பெருமையுரைத்தேன்
சரணம்
கேசவனெனும் நாமம் வாயரச் சொல்லி
ஆசா பாசத் தளைகளைக் களைந்திட
நேசமுடன் துதித்தேன் மறவாமல் நாளும்
காசினி போற்றுமுனை நாராயணாவென
நாரயனாவென்று நாவர அழைத்து
ஓராயிரம் நாமம் பாராயணம் செய்தேன்
தீரா வினை தீர்க்க வேண்டுமெனத் துதித்து
மாறாத பக்தியுடன் மாலனே மாதவா
மாதவன் நீயே கலியுகத் தெய்வமென
சீதக் கடல் நடுவே பள்ளிகொண்டிருக்கும்
யாதவன் உந்தன் கழலடி பணிந்தேன்
பூதலம் புகழ்ந்தேத்தும் கோவிந்தா
கோவிந்தாவென்று மனமாரத் துதித்து
பூவிதழ்கள் தூவிப் பூசைகள் செய்து
நாவார ப்பாடி நலம் நாடி வந்தேன்
காவல் தந்தருள்வையே ஸ்ரீ விஷ்ணு
விஷ்ணுவெனும் திருமாலே வேதங்கள் மீட்டவனே
அஷ்டதிசை பாலரும் அமரரும் முனிவரும்
இஷ்டமுடன் வணங்கிடும் தீன சரண்யனே
துஷ்ட அரக்கரை மாய்த்திடும் மதுசூதனனே
மதுசூதனனே மனமோகனனே
இதிகாச புராணங்கள் கொண்டாடும்
யதுகுல திலகனே நீலவண்ணனே
கதியுன் பதமே திரிவிக்கிரமனே
திரிவிக்கிரமனுன் பதம் பணிந்தேன்
விரிகமல மலரமர் பிரமனைப் படைத்த
அரியே அரன் தொழும் ஆதிமூலமே
கிரிதனைக் குடையாய் செய்த வாமனனே
வாமனனாய் வந்து மாவலியை வென்ற
தாமரை நாபனே பரம தயாளனே
மாமறைகள் பணிந்தேத்தும் ஆராவமுதனே
காமனைப் படைத்த அழகிய சீதரனே
சீதரனே திருமகளைத் தன் மார்பில் வைத்திருக்கும்
ஆதவகுலத்துதித்த மாதவனே ராகவனே
சாதித்த புண்ணியர் வணங்கிடும் கண்ணனே
மேதினியோர் பணிந்திடும் இருடீகேசனே
இருடீகேசனே அரவிந்த பதத்தானே
வருமிடர் களைந்திடும் வானவர்கோனே
தருமநெறி காக்க அவதாரமெடுத்தவனே
கருட வாகனனே பதுமனாபனே
பதுமனாபனே பாற்கடல் வாசனே
சதுர் முகன் துதித்திடும் கருமுகில் வண்ணனே
எதிரிடும் அரக்கரை வதைத்த மாயனே
மதுகைடபரை அழித்த தாமோதரனே
தாமோதரனே தயாபரனே
காமாதியறுபகை யகலவென்று
தூமலர் தூவியுன் நாமமே போற்றி
தாமரைப் பாதம் சரணடைந்தேன்
No comments:
Post a Comment