கருணாகரனென்று.....
பல்லவி
கருணாகரனென்று அழைப்பதெல்லாம்
பொருந்துமோ உனக்கு ஶ்ரீரகு ராமா
அனுபல்லவி
உருகியுன் நாமம் தினம் துதித்திடுமெனை
திருமாலே கேசவா ஆட்கொள்ளாத உனை
சரணம்
குரு வசிஷ்டரும் கௌசிக முனிவரும்
பெருமையுடன் கொண்டாடும் கோசலராமனே
இருவினைப் பயன்களால் நான் படுந்துயரை
கருணையுடன் களைந்திட உனதருள் வேண்டினேன்
துருவனுக்கும் பாலன் பிரகலாதனுக்கும்
அருள் தந்தவனே ஆதவ குலத்தோனே
திருமகள் சீதையை அபகரித்த ராவணனை
கருவறுத்தவனே கோதண்ட ராமனே
தருமநெறி காக்க தரணியிலவதரித்த
திருவின் நாயகனே தீனசரண்யனே
வருமிடர் களைபவனே வாஞ்சையளிப்பவனே
கருமுகில்வண்ணனே சீதாராமனே
No comments:
Post a Comment