தேவாதி தேவனே...
பல்லவி
தேவாதி தேவனே ஶ்ரீ ராமச்சந்திரனே
பூவார் மலர் கொண்டு சேவடி பணிந்தேன்
அனுபல்லவி
மாவாய் பிளந்தானே கேசவனே மாதவனே
காவாவென்றழைத்துன் திருவடி பணிந்தேன்
சரணம்
மூவாசைப் பிணிபோகும் முன்வினைப் பயன் நீங்கும்
நாவார உன் நாமம் பாடித் துதிப்போர்க்கு
பாவாணர் போற்றும் பானுகுல திலகனே
தேவி ஜானகியின் மனங்கவர்ந்த மன்னவனே
கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்தவனே
தாமரைக் கண்ணனே காமனைப் படைத்தவனே
மாமறையோதும் முனிவர்கள் பணிபவனே
பூமியிலுன் புகழ் பாடும் பாமரனெனக்கருள்வாய்
தேவரும் அசுரரும் திசைகளும் வணங்கிடும்
கோவலனே குணநிதியே கோசலைமைந்தனே
காவலனாய் நின்று வேள்விதனைக் காத்தவனே
மாவிடை வாகனன் ஈசன் சிவநேசனே
No comments:
Post a Comment