ஒருமுறை சொன்னால் ......
பல்லவி
ஒருமுறை சொன்னால் போதாதோ உனக்கு
திருவின் நாயகனே ஶ்ரீ ரகுராமா
அனுபல்லவி
பெருமைக்குரிய அயோத்தி மன்னனே
குருவாயூர் தலத்திலுறை கேசவனும் நீயே
சரணம்
கருமவினைப் பயனால் நான் படுந்துயரங்கள்
அறியாதவனோ நீ உலகனைத்தும் காப்பவனே
தருமமோ முறையோ தாமோதரனே
அருமறைகள் போற்றும் அனந்தராமனே
கடல் கடைந்தமுதெடுத்து தேவருக்களித்தவனே
கடல் கடந்திலங்கை சென்று ராவணனை வதைத்தவனே
மடந்தை அகலிகையின் சாபம் திர்த்தவனே
விடம் கொண்ட பாம்பணைமேல் பள்ளிகொண்டவனே
பல முறை உன்னிடம் முறையிட்டு சலித்தேன்
தலம் பல வந்து உன்னையே துதித்தேன்
உலகில் உனையன்றி வேறு யார் எனக்குளார்
ஜலசயனத்துறையும் வரதனே ராகவனே
இந்திரனும் பணியும் சுந்தரன் நீயே
மந்தரையின் சூழ்ச்சியால் வனம் சென்றவனே
தந்தையின் சொல்காத்த தனயனே ராமா
எந்தனைக் காத்திட இன்னுமென்ன தயக்கம்
No comments:
Post a Comment