தினம் தினமுனையே.....
பல்லவி
தினம் தினமுனையே துதித்தேனே ராமா
எனையொரு பொருட்டாக கருதாதேனோ
அனுபல்லவி
ஜனகனின் புதல்வி அன்னை ஜானகியும்
எனது முறையீட்டை எடுத்துரைக்கவில்லையா
சரணம்
தனம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்
உனதருள் ஒன்றே போதுமெனப் பணிந்தேன்
தினகர குலத்துதித்த கேசவனே ரகுராமா
அனந்தனும் அனுமனும் வணங்கிடும் ரகுவரனே
வனவிலங்கெனவே புலங்களனைத்தும்
தனது வழியிலே செல்லும் நிலைமாறி
மனமொரு நிலைபெறவும் உன் நாமமுரைத்திடவும்
வனமாலையணிந்தவனே உனையே வேண்டினேன்
சனகசனந்தன முனிவர்கள் துதித்திடும்
அனங்கனைப் படைத்த கோசலராமனே
எனக்கருள இன்னும் உனக்கென்ன தயக்கம்
வினதையின் மகன் பணியும் சீதாராமனே
No comments:
Post a Comment