ஜானகி நாயகனே......
பல்லவி
ஜானகி நாயகனே ஜனகனின் மருமகனே
தீனனெனக்கருள சகுனம் பார்ப்பதென்ன
அனுபல்லவி
ஆனைக்குமபயம் அளித்த கேசவனே
தீனசரண்யனே திருவடி சரணடைந்தேன்
சரணம்
வானவர் தானவர் பணியும் ஜெயராமனே
ஞானியர் முனிவர்கள் துதித்திடும் ரகுவரனே
மானென வந்த மாரீசனைக் கொன்றவனே
மீனென அவதரித்து மறைகளை மீட்டவனே
கானமியற்றியுன் நாமமே போற்றினேன்
வானர மன்னன் சுக்ரீவன் தோழனே
ஞானத்தில் சிறந்த அனுமனின் நேசனே
ஆனிறை மேய்த்தவனே அயோத்தி மன்னனே
பானு குலத்துதித்த பங்கயநாபனே
வானுறை இந்திரனும் வணங்கிடும் பாதனே
தானெனும் அகந்தை கொண்ட ராவணனை வதைத்தவனே
மாநிலம் கொண்டாடும் கோதண்டராமனே