“நமது இசையும் இசைப் பாரம்பரியமும்”
“நமது இசையும் இசைப் பாரம்பரியமும்”
போன வாரம் ம்யூசிக் சிட்டி எனப்போற்றப்படும் (Nashville,Tennessee) நேஷ்வில்லி டென்னஸ்ஸியிலுள்ள “Musicians Hall of Fame and Museum”, என்ற புகழ் பெற்ற இசைக் கலைஞர்கள்,இசை பற்றிய ஒரு அற்புதமான காட்சி அரங்கத்திற்கு சென்றிருந்தேன். அமெரிக்கர்கள் தங்கள் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும் எவ்வாறு போற்றிப் பராமரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த அரங்கத்தில் அவர்கள் இசைக் கலைஞர்கள் பற்றியும்,அவர்கள் பயன் படுத்திய இசை கருவிகளையும், அவர்களணிந்த வித்யாசமான ஆடை ஆபரணங்களையும், அவர்கள் உபயோகித்த கார்களையும்,மற்றும் அதன் விவரங்களையும், காட்சிப்படுத்தியுள்ளார்கள். ஒவ்வொரு கலைஞர் பற்றியும்,அவர்கள் பாடிய பாடல்கள், வாசித்த வாத்தியக் கருவிகள் என எல்லாவற்றையும் காட்சிப் படுத்தியுள்ளார்கள்.மிகவும் பிரம்மாண்டமான மூன்று மாடிக் கட்டிடத்தில் இவற்றை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கலைஞரின் தனித்துவம், இசைக்கு அவர்களின் பங்களிப்பு போன்ற விவரங்களை அழகாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். இதைப்பார்த்தபின் என் மனதில் தோன்றியதை கீழே பகிர்ந்துள்ளேன். நம் சென்னையிலும் கூட பல ஆண்டுகளாக வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கச்சேரி சீசன் களைகட்டி பலப்பல சபாக்கள் பல இசைக்கலைஞர்களின் சங்கீதத்தை மேடையேற்றி அவர்களை கௌரவித்தும் ரசிகர்களுக்கு இசை விருந்தளித்தும் மகிழ்வுறச்செய்கிறார்கள். இவற்றில் குறிப்பிடத்தக்க சபாக்களாக,மியூசிக் ஆகாடமி, தமிழிசைச் சங்கம், கிருஷ்ண கான சபா, நாரதகான சபா, பிரம்ம கான சபா, மைலாப்பூர் பைன் ஆர்ட் சொசைட்டி, ரசிக ரஞ்சனி சபா, பாரதீய வித்யா பவன், இண்டியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, etc.etc. என பலப்பல சபாக்கள் ஒவ்வொரு ஆண்டும் இசை விழா நடத்தி கலைஞர்களை கௌரவிக்கிறார்கள். இப்படிச் செயல் படும் சபாக்கள் ஏன் தனியாகவோ கூட்டு முயற்சியாகவோ, நம்மூரிலும் இசையையும் இசைக்கலைஞர்களையும் கௌரவிக்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்ட காட்சியகம் உருவாக்கி, அதில் நம் கலைஞர்களையும் அவர்களின் இசையையும்,பாரம்பரியமான இசை வாத்தியங்களையும், காட்சிப் படுத்தி நமது இசை பாரம்பரியத்துக்கு ஒரு புகழ் வெளிச்சம் நிரந்தரமாகக்கிட்டுமாறு ஏற்பாடு செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. நண்பர்களும் இசையார்வலர்களும் இது பற்றிய தத்தம் கருத்துக்களைப் பகிரலாமே!!
No comments:
Post a Comment