Saturday, 12 August 2023

எத்திசையும்…..

 


                             எத்திசையும்…..


                               பல்லவி

              எத்திசையும் புகழ் விளங்கும் கேசவனே மாதவனே

              நித்திலத் தொத்தே எனையாண்டருள்வாயே

                           அனுபல்லவி

              கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் கோவிந்தா

              உத்தமனே உனையன்றி வேறொருவர் நானறியேன்        

                               சரணம்      

              பாலைச்சுருக்கி நெய்மணம் கமழும்

              அரிசி பருப்புடனே ஏலம் ஜாதிக்காய் சேர்த்து

              நாட்டுச் சக்கரையிட்டு அக்கார வடிசலும்

              தித்திக்கும் திரட்டுப்பாலும் வெல்லச்சீடையும்


              முத்துச்சரம் போல் முறுக்கும் கரகரவென்று

              கடலைபருப்புடைய தட்டையும் சீடையும்

              தித்திக்கும் தேன் குழலும ப்பமுமதிரசமும்

              அத்தனையும் நான் தருவேன் கண்ணா உனக்கே



    


முத்துச்சரம் போல் முறுக்கும், கரகரவென்று, கடலை பருப்பு எட்டிப்பார்க்கும் தட்டையும் குட்டிக்க்ருஷ்ணருக்கு  உகந்ததாம்!

பெருமாள் திருவாயில் கரைந்து உருண்டோடும் கோலிகள் போன்ற சீடையும், நெய் கோர்த்துக்கொண்டு பிரசன்னமாக இருக்கும், தேன் குழலும் , அவருக்கு மெத்த சந்தோஷத்தைக்கொடுக்குமாம்! ருசி மேம்பட்டு இருந்தால்!

அரிசிமாவும், வெல்லமும் சேர்ந்து  அதிரசம் ஆகும் அற்புதத்தை யார் கண்டு பிடித்தார்களோ!! அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணனால் கையில் தங்கக்காப்பு தான் போட்டு அழகு பார்க்க வேண்டும்!! 


நெய் அப்பமும் சுகியனும், பகவானுக்கு மிக அருமை! அமிர்தமாக மணக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பார்!


மெல்லியதான தேன் குழலும் , கோலம் போட்டாற்போல் பொன்மயமாக மிளிரும், மனங்கொம்பும், நிச்சயமாக உண்டு! குழந்தை கிருஷ்ணருக்கு எது தான் பிடிக்காது?!


நம் ஆசையை சுருக்குவது போல், பாலைச்சுருக்கி சுருக்கி, நெய்மணக்கும் அரிசி பருப்புடன், பச்சைக்கர்ப்பூரம் , ஏலக்காய் , ஜாதிக்காய், நாட்டுச்சக்கரை இவற்றுடன் நம் அன்பையும், நேசத்தையும், பக்தியையும் , அக்கார வடிசலில் கரைத்துக்கொட்டினால் , நாராயணன் இன்னும் விரும்பி ஏற்றுக்கொள்வார் அல்லவா!


வெல்லச்சீடையும், மைசூர் பாகும், தித்திக்கும் திரட்டுப்பாலும், வெல்ல அவலும்,புனிதமான  நவநீதமும், காய்ச்சின பாலும், புதுத்தயிரும், மா, பல, வாழை, கொய்யா , சிவந்த முத்துக்களுடைய மாதுளம், ரசம் சொட்டும் ஆப்பிள் , தித்திக்கும் திராக்ஷை , இன்னும் , இன்னும் பலப்பல சித்ரான்னங்களும், காரமும், இனிப்பு பண்டங்களும், நம் மனது என்கிற அட்டவணையில் இடம் பெற்றுள்ளன, பகவானுக்கு சமர்பிக்க வேண்டி! 


துளசியும், பூமாலைகளும் , வாசல் நிறைய தோரணங்களும், வழியெல்லாம், அழகுமிக்க கோலங்களும், பெருமாள் திருவடிகளுக்கே!


சர்க்கரை கட்டியாகி தொண்டையில் குத்தி, சிக்கல் வராமல், சிலருக்குத்தான் பதமாக, முந்திரி நொக்கல், அருமையாக செய்யத்தெரியும் ! இல்லையென்றால் நக்கல் தான்!


பளிச்சென்று புடவை உடுத்தி, ஸ்ரீமன் நாராயணன் துதி செய்தோமானால், குறையாத குதூகலமும் , அன்பு மாறாத மனங்களும் நமக்கு சொந்தமாக்கி விடுவார் அந்த பரந்தாமன்! !


கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை

மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை

எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்

அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.

(பெரிய திருமொழி 8-9-1)


திருக்கண்ணபுரம்


இல்லையலல் எனக்கேல் இனியென்குறை 

அல்லி மாத ரமரும் திரு மார்பினன் 

கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் 

சொல்ல நாளும் துயர் பாடு சாரவே. -நம்மாழ்வார்.


திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்!"சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.


இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.


இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார்."ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது.அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.


மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.


இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது.இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கி றார்கள்.சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்ற இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. 


இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. 


திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.


கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.


திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை(பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 


108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.          

                           

                           

                           

No comments:

Post a Comment