Friday, 28 July 2023

“ சரணாலயம் “

 

                                       “ சரணாலயம் “

                                 அத்தியாயம் 7  —   “சேகரன்”


    கடைசியாக நாம்  சரணாலயத்தில் செல்லையாவை சந்தித்தது பற்றிப் பார்த்தோம். இன்று நாம் சந்திக்கப் போவது சேகரன். சேகரனை நான் முதல் முதலாகப் பார்த்த அனுபவத்தை மறக்கவே இயலாது. அப்படி அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்த சந்திப்பு. ஒரு நாள் நான் சென்னை மாம்பலம் கடைவீதியுன்றில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அங்கு ஒரு கடை வாசலிலே நடைபாதை ஓரமாக ஒரு இளைஞன் நிறைய தாடி மீசயுடன் குட்டிச்சுவற்றில் சாய்ந்து சரிந்து கிடந்தான். அவன் இருந்த நிலை கண்டு மனம் திக்கிட்டது. ஏதோ போதையடைந்தவன் போல தன்னிலை,தன்னினைவின்றிக் கிடந்தான். அருகே சென்று பார்த்தேன்.  அரை குறையாக நினைவிருந்தது. ஆம், ஏதோ ஒரு போதைப் பொருள் சாப்பிட்டிருந்தான். தம்பி தம்பி என்றழைத்தேன். பதில் சொல்லும் நிலையில் அவனில்லை. கையிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து சிறிது தண்ணீரெடுத்து முகத்தில் தெளித்தேன். சற்றே நினைவு வந்தவனாக சுதாரித்துக் கொண்டு அண்ணாந்து பார்த்தான். யாருப்பா நீ!? ஏன் இங்கே விழுந்து கிடக்கிறாய் என்று கேட்டேன். தீனமான குரலில் ஏதோ சொல்ல முயற்சி செய்தான். ஆனால் குரலெழும்பவில்லை.  ஏதாவது சாப்பிடுகிறாயா!? நான் ஓட்டலுக்குத்தான் போகிறேன்,வா, என்று அருகில் உள்ள உணவகத்துக்கு கைத்தாங்கலாக அழைத்துச் சென்றேன். அங்கவன் பசியாறினான். பிறகு மெள்ள மெள்ள அவன் கதையைக்கேட்டறிந்தேன். அவன் பெயர் சேகரன். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். பெற்றோருக்கு ஒரே மகன். பெற்றோரிருவருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தவர்கள்.  தந்தை மாநில அரசாங்கத்தில் உயர் உத்தியோகத்திலிருந்தவர். தாய் ஒரு பெரிய வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்தவர். இவனும் நல்ல உயர் கல்வி படித்தவன். அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி படித்து, மாநிலத்தின் முதல் மாணாக்கனாகத் தேறியவன். பிறகு சென்னை M.I.T. யில் மேல் படிப்புப் படித்திருந்தான். பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் அமெரிக்காவிலுள்ள Massachusetts Institute ல் மேற்படிப்பு மற்றும் Doctorate பட்டம் பெற்று சிறந்த மாணவனாகத் தேறினான். அதனால் அங்கேயே, Silicon valleyயில், Adobe என்னும் ஒர சாப்ட் வேர் நிறுவனத்தில் உத்தியோகமும் கிடைத்தது. கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என்றாலும் தனிமை அவனுக்கு இனிமையாக இல்லை. அதற்குள்ளாகத் தந்தை உத்தியோக ஓய்வு பெற்று விட்டார். தாயும் வாலண்டறி ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு இருவரும் சொந்த கிராமத்தில் செட்டிலாகி இருந்தனர். பெற்றோரை ஒரு முறை அழைத்து வந்து கூட வைத்துக்கொண்டானெனினும் அவர்களுக்கு நிரந்தரமாகத் தங்க விருப்பமில்லை என்று கூறி மீண்டும் சொந்த கிராமத்திற்கே சென்று செட்டிலாகி விட்டனர். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சேகரனுக்கு மணமுடிக்க இயலவில்லை. ஏனோ இந்த நாட்களில் மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. இப்படி சில ஆண்டுகள் பறந்தன. சேகரனுக்கு மள மளவென உத்தியோக உயர்வு கிடைத்து விட்டது.  பெரிய வீடு, கார்கள்,என வசதிகள் மேலும் மேலும் கிடைத்தது. இந்தக் கட்டத்தில்  அவன் பெற்றோர் கார் விபத்தில் மாண்டனர். கொள்ளி போடக்கூட முடியமலாயிற்று. சில நாட்களுக்குப் பிறகே அவன் சொந்த ஊருக்குப் போக முடிந்தது.  தனியே திரும்பிய சேகரனுக்கோ ஏனோ வாழ்க்கையில் பிடிப்பிலாமல், மன அமைதி இல்லாமலாயிற்று.  ஏனோ அவனுக்கிந்த உல்லாச அமெரிக்க வாழ்க்கை பிடிக்காமல் போயிற்று. அங்குள்ள இஸ்கான்ஸ் (ISKONS) கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தான். அங்கும் அவன் தேடிய மன நிம்மதி அவனுக்குக் கிடைக்கவில்லை. வேலையை உதறிவிட்டு அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு சொந்த ஊர் திரும்பினான். அங்கு அவன் பெற்றோர் வாழ்ந்த வீட்டில் குடியேறினான். வசதிக்கும், காசுக்கும் குறைவில்லாததால், அடிக்கடி கோவில் குளம், மலைவாசஸ்தலம், இறைபணி மன்றங்கள், மடங்கள்,என சுற்றித்திரிந்தான். ஏனோ அவன் மனம் அமைதி பெறவில்லை. அவன் தேடிய நிம்மதி எங்கும் எதிலுமவனுக்குக் கிடைக்கவில்லை. மலைவாசஸ்த்தலங்களில் கிடைத்த சகவாசங்களால் போதைப் பொருள் பழக்கமேற்பட்டது. அடிக்கடி போதைப்பொருட்களைப் பயன் படுத்தத் தொடங்கினான். எனினும் அதனாலும் அவன் தேடிய மன அமைதி ஏனோ அவனுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவனை நான் சந்தித்தேன். ஏனோ அவனுக்கு என் நட்பில்  ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பின் அவன் என்னை அடிக்கடி சந்தித்தான். அவனும் நானுமாக ரமணாச்ரமம், ராமகிருஷ்ணா மடம் என சில இடங்களுக்குச் சென்றோம். நடு நடுவே அவனை நான் போதை அடிமை பழக்கம் நீக்கும் சென்டருக்குக் கூட்டிச்சென்றேன். சில மாதங்களில் நல்ல மாற்றம் உண்டாயிற்று. அவன் அந்தப் பழக்கத்தை அறவே விட்டு விட்டான்.  ஊருக்குச்சென்று சொந்த வீடு நிலம் எல்லாம் விற்று, கிடைத்த தொகையை வங்கியில் வைப்பு நிதியாக வைத்தான். என்ன சொல்லியும் அவனுக்க மண வாழ்வில் ஈடுபாடில்லாமலாயிற்று.  இந்த நிலையில் ஒரு நாள் என்னோடு, சரணாலயம், வந்தான். அங்கு வந்த பின் அது பற்றி நிறைய கேட்டறிந்தான். நானவனை முத்துக்கருப்பன், தெய்வானை தம்பதியருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர்கள் செய்யும் பணியில் தன்னையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தான். நானும் அவனைப் பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரிவித்தேன்.  அவர்களும் அவனங்கு தங்கி அவர்களுக்கு உதவுவதை வரவேற்றனர்.  இதோ பதினொரு ஆண்டுகள் ஓடி விட்டன. சரணாலயத்தில் சேகரன் சேரும் போது அவன் வயது முப்பதியேழு. இதோ இன்று நானவனை சந்திக்கும் போது அவன் வயது நாற்பத்தெட்டு. இன்று சேகரன் பிறந்த நாள். வாழ்த்துக் கூறவும் நலம் விசாரிக்கவுமே அங்கு வந்திருந்தேன்.







            

No comments:

Post a Comment